Monday, November 22, 2021

தமிழ்ஸ்டுடியோ எனும் சினிமா பல்கலைக்கழகம்






 திரைப்படம் என்பதை மலிவான ரசனைக்கு வடிகாலாக பலர் பயன்படுத்தும் நிலையில் அது கலை வடிவின் ஓர் உச்சம் என்ற புரிதல் சிலருக்கே உண்டு.

   இசை , கவிதை ,  சிறுகதை , நாவல் , ஓவியம் , புகைப்படக்கலை என  அனைத்து வகை கலைகளும் சங்கமமாகும் அரும்பெரும் கலை வடிவம் திரைப்படம்.   


அந்த வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு செய்து வரும் பணிகள் மகத்தானவை

ஏராளமான குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , உலகத்திரைப்படங்கள் ,  அரிய இந்திய  திரைப்படங்கள் ,  தமிழ் சாதனைப்படங்கள் என ஏராளமான திரையிடல்கள் மூலம் ரசனையை உயர்த்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கியப் பங்கு உண்டு

    ஜெய்பீம்  போன்ற படங்கள்  தமிழில் உருவாக முடியும் என்ற  லட்சியக்கனவு விதையை பல ஆண்டுகள்,முன்பே விதைத்த இயக்கம்  தமிழ் ஸ்டுடியோதான்


வடபழனி, பேருந்து நிலையம்,அருகே,இயங்கி,வந்த  ப்யூர் சினிமா அலுவலகம்  சினிமா ஆர்வலர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது..   அங்கு வந்து தம்மை மெருகேற்றிக் கொண்ட பலர் இன்று திரைவானில் ஜொலிக்கின்றன


அலுவலகம் நுழைந்தால் திரைப்டக்கல்வி பயிலும் படிமை மாணவர்களால்,   பாலின சாதி மத அடையாளங்களற்ற  இளைஞர்களால்  அந்த இடமே

அறிவிப்பிழம்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கும்


பெளர்ணமி இரவு திரையிடல்களை  இரவு விவாதங்களை யாரால் மறக்க முடியும்


ப்யூர் சினிமா புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கத்தில்  இயங்கி வருகிறது.  கீழ்த்தளம் ,  நெரிசல் இல்லாத இடம் போன்ற அனுகூலகங்களுடன் அற்புதமாக தன் பயணத்தை தொடர்கிறது ப்யூர் சினிமா புத்தக அங்காடி.


தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வெளிவரும் படச்சுருள் மாத இதழ் தமிழ் இதழியல் வரலாறில் என்றும் நிலைத்திருக்கும்.

இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த,அமைப்பு பல்லாண்டுகள் பயணித்து சாதனைகள் புரிய வாழ்த்துகள்


வாழ்த்துகளை விட   நமது சார்பில்  வருங்கால தலைமுறைகள் சார்பில்  நன்றி என்பதே பொருத்தம்




Sunday, November 7, 2021

வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு

 ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நல்ல மகன், நல்ல நண்பன் ,  நல்ல கணவன் ,  நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.

ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து

வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன்.  ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன்.  ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன்.   சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்


ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன்.  அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.


இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி.   எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே


வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது,  ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.


ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது.  அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது.  கபந்தன் வீழ்த்தப்பட்டு ,  சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்

இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான்.  சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்

வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை  சொல்கிறான் ?  ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;

அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை.   அவளிடம்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன்.  சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என  அவளும் சொல்லவில்லை.   சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.

கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.  ராமன்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் ,  அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை

அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே  ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்


கபந்தன் ,  சபரி  மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்


அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி

இதில் ஒரு சுவாரஸ்யம்


தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான  சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)

லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை.  சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்

ஆக தனக்குப் பிடிக்காத  ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது


கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

பின்குறிப்பு

இதில் ஒரு சுவாரஸ்யம்.  அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்

ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது

அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது.  எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே  சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் ராமன் இப்படி  சொல்கிறான்

சகோதர பாசம் அரிது.  எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா?  பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என  பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்

சுவையான இடம்




Friday, November 5, 2021

அண்ணாத்தே − திரைப்பார்வை

 ரஜினியுடன் நெருக்கமான  இயக்குனர்கள் ராஜசேகர் , மகேந்திரன் , எஸ்பிஎம் ,  கேஸ்ரவி  ,  பி.வாசு  போன்றோருடன் இணைவதை பல நடிகர்கள் விரும்புவார்கள்.

ரஜினி வரலாற்றில் முதன்முறையாக இன்னோரு நடிகரின் இயக்குனருடன் ஆசைப்பட்டு இணைந்திருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவுடனான இணைவு எப்படி இருக்கிறது?

அண்ணன் தங்கை என்ற பிரதான கதைக்குள் சில ஹைக்கூக்கள் , சில சிறுகதைகள் என பல படங்களில் காண முடியாத ( ரஜினி படங்களிலும் இதுவரை இல்லாத )    சில  வித்தியாசமான  அனுபவங்களை படம் தருகிறது.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை மிகவும் அலட்சியமாக அவமரியாதையாக நடத்துகிறான் காளையன். பிற்பாடு பிரகாஷ்ராஜ் பாத்திரம் வெகு உயரத்துக்கு சென்று  காளையனே அவர் பாதம் பணியும் அளவு செல்கிறது.  தன்னளவில் ஒரு தனி சிறுகதை

பிரகாஷ்ராஜிடம் வேண்டுமென்றே அடிவாங்கும் காட்சி அமைப்பு அழகான  கவிதை


அதுபோல இரு வில்லன்களுக்கிடையே ( அகனிநட்சத்திரம்)  போன்ற  வாரிசுரிமைப்போர்.   ஒரு கட்டத்தில் தம்பி வாழ்க்கையில் தோற்று தற்கொலை செய்து கொள்ள ,  தம்பி என்ற அங்கீகாரம் பெற்று திருப்தியுடன் கண் மூடுகிறான்

அதுவரை தம்பி என ஏற்காத அண்ணன் ,  தனது தம்பிக்காக தன் உயிரேயே பணயம் வைக்க தயாராகிறான்.

இப்படி ஒரு உருக்கமான கிளைக்கதையை − அதுவும் வில்லனுக்கு−  படங்களில் பார்ப்பது அரிது


புதிய தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடனான ரஜினியின் கெமிஸ்ட்ரிரசிக்க  வைக்கிறது

அண்ணாத்த பட படப்பிடிப்பு அனுபவங்களை கவிஞர் பிறைசூடன் பெருமையுடன் சொன்னது நினைவிருக்க்கூடும்.  அவர் நடித்த காட்சிகளைப் பார்க்க அவர் இன்று இல்லை.  மரியாதைக்குரிய − ரஜினிக்கே அறிவுரை சொல்லத்தக்க −  பெரியப்பா பாத்திரம்.   பிறைசூடன் ரசிகனாக மகிழ்ச்சி

பாண்டியராஜன்  , லிவிங்க்ஸ்டன் ,  குஷ்பூ , மீனா ,  சதீஷ் , சத்யன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள்  ஃபீல் குட் சூழலை உருவாக்குகின்றனர்

இடைவேளைக்குப் பிறகு வேறொரு படமாக மாறி விடுகிறது அண்ணாத்த

டூயட்டுகளுக்காக  கவர்ச்சிக்காக  நாயகிகள்  அல்லது அடக்கி  வைக்கப்படுவதற்காக  நாயகிகள்  என்பது மாறி ,  ரஜினிக்கு இணையான அந்தஸ்துடன் ,அவருக்கு உதவி செய்யக்கூடிய திறனுடன் அவர் பட நாயகிகள் சமீபத்திய படங்களில் வருகின்றனர்.  இதில் நயன்தாரா அப்படிப்பட்ட  ஓர் ஆளுமையாக வருகிறார்

முள்ளும் மலரும் படத்தில்  அண்ணனுக்காக  காதலை மறுக்கத் தயராகும் தங்கை

இந்தப்படத்தில்  தங்கையின் மனமகிழ்ச்சிதான்  முக்கியம் என நினைக்கும்  அண்ணன்

காலம் ஏற்படுத்தியுள்ள இந்த  மாற்றம் குறிப்பிடத்தக்க ஒன்று


ரஜினியின் மேக்அப் , சிகை அலங்காரம் என புதிய தலைமுறை கலைஞர்கள் சிறப்பு.  ரஜினியின் பிரமாண்டமான  நிழல்  தங்கைக்கு எப்படிப் பொருள்படுகிறது  வில்லனுக்கு எப்படி பொருள்படுகிறது என்ற ஒப்பீடு இயக்குனரின் பெயர் சொல்லும்.   ஒளிப்பதிவு தரம்

இசை  பொருத்தமாக இருக்கிறது.  பாடல்களில் தியேட்டர் குலுங்குகிறது

கீர்த்தி சுரேஷ்  கண்களில் நிற்கிறார்

நல்லது செய்ய பொய் சொல்லலாம் என நினைத்து பாட்டி சொல்லும் பொய் தீமையாக முடிகிறது என்பது யதார்த்தமான  ட்விஸ்ட்


அனைத்து  கேரக்டர்களும்  அந்தந்த கேரக்டர்களின்  தன்மைக்கேற்ப  உயர்வுடன்  பேசுவது ரசிக்க வைக்கிறது.  நாயகனுக்கு மட்டுமே  அனைத்தும் தெரியதும் ,  நாயகி உட்பட அனைவரும் கோமாளிகள் என்ற தேய்வழக்கு தவிர்க்கப்பட்டுள்ளது


மொத்தத்தில்  அண்ணாத்தே  ,  அருமை







Monday, October 18, 2021

மக்கள் நாயகன் ராமராஜனுக்கு என்ன ஆச்சு?

 

மக்கள் நாயகன் ராமராஜன் குறித்தும் அவர் உடல் நலம் குறித்தும் சில வதந்திகள் பரவின

இவை தவறு என அவர் விளக்கமளித்துள்ளார்;

அவர் சார்பில் வெளியான அறிக்கை ;

ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்து கொள்வார்'' 

என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது

Friday, July 30, 2021

கோவிஷீல்ட்

 சும்மா  இருந்த  சங்கை  ஊதிக்  கெடுத்ததுபோல ,  சாதாரண  கொரானா வைரைசை  தடுப்பூசிகள் மூலம் mutation ஆக வைத்து  பேரழிவு வைரசாக மாற்றியதில் எனக்கு வருத்தம்தான்

அதனால் தடுப்பூசி போடவில்லை.

ஜலதோஷம் போல  கொரானா ஒருவாட்டி வந்து சென்றது


ஆனாலும்  நடைமுறை தேவைக்காக,தடுப்பூசி  போட முடிவு செய்தேன்


முடிவு செய்த நேரம் பார்த்து  தடுப்பூசி தட்டுப்பாடு வந்து விட்டது.  எனவே  போட முடியவில்லை


ஒரு நண்பர் வெளிநாடு  செல்ல தடுப்பூசி கட்டாயம் என்ற சூழலில் இருந்தார்.   அவருக்கு உதவ முடிந்தது.  ஆனால் நான் போட்டுக் கொள்ளவில்லை


ஒரு வழியாக இன்று  போட்டுக் கொண்டேன்  ( 30,07 2021 )  


அரசு இயந்திரம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது


ஹார்ட அட்டாக வருகிறது , காய்ச்சல் என்றெல்லாம் சிலர் சொன்னார்கள்.   துரதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த அனுபவங்கள் கிடைக்கவில்லை


Friday, June 18, 2021

சிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை

 விருப்பு வெறுப்பின்றி அனைத்து மத அனைத்து வகை ஆன்மிக அமைப்புகளுக்கு செல்பவன் என்ற முறையில் சிவசங்கர் பாபா குறித்து உங்கள் அனுபவம் என்ன என கேட்பவர்களுக்காக இந்த பதிவு

சில மாணவிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு சரி அல்லது தவறு என சிபிசிஐடி விசாரணைதான் ஒரு தெளிவைத்தரும்.  அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை


இருபது ஆண்டுகள் செயல்படும் பள்ளியில் திடீரென ஏன் இப்போது ஏன் குற்றச்சாட்டு என்பது தெரியவில்லை.  ஆனாலும் உண்மை எப்போது வெளிவந்தாலும் நல்லதுதான்


சுஜாதா இந்தப்பள்ளிக்கு சென்று , விகடனில் உயர்வாக எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்

வலம்புரிஜான் , மாலன் , சுதாங்கன் என பலரும் உயர்வாகவே தமது  பதிவு செய்துள்ளனர்.

அப்படி ஒரு கருத்துதான் எனக்கும்.  நானும் அந்த ஆஸ்ரமத்தை சென்று பார்த்துள்ளேன்.  


ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்க்கூடும். அதை என் போன்ற வழிப்போக்கர்கள் ஊர்ஜிதப்படுத்தவோ மறுக்கவோ முடியாது;

     சிவசங்கர் பாபா தப்பி ஓட முயற்சிக்கவில்லை.   இதய நோயாளியான அவரால் தப்பி ஓடி ஒளிய முடியாது.  விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

விசாரணையில் உண்மை வெளி வரும்வரை காத்திருப்போம்

யார் வேண்டுமானாலும் எப்போதும் செல்லலாம் ,  காணிக்கைகள் இல்லை , அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் என பிரகாசித்த சம்ரட்சணா அமைப்பும் சுஷில் ஹரி பள்ளியும் வீழுமா அல்லது இந்த திடீர் வெளிச்சத்தால் மேலும் புகழடையுமா என்பதெல்லாம் விசாரணை முடிவில்தான் தெரியும். 

உண்மை வெல்லட்டும்


இதில் ஒரு சுவாரஸ்யம்

மஞ்சள் பத்திரிக்கைகளும் , இணைய ஊடகங்களும் அவர் மீது எந்த ஆதாரமும் இன்றி சேற்றை வாரி இறைத்தன

சன் டிவி விவாதத்தில் யாகவா முனிவர் , சிவசங்கர் பாபாவை செருப்பால் அடித்தார் என்றெல்லாம் அடித்து விட்டனர்

சம்ரட்சணா மீது எதிர்கருத்து கொண்டிருக்கும் சன் டிவி , அந்த விவாதத்தை தன் கரூவூலத்தில் இருந்து ஒளி பரப்பியது.

சன் டிவி நினைத்திருந்தால் ,  பாபா பேச்சை எடிட் செய்து விட்டு , யாகவா முனிவர் பேச்சைமட்டும் வெளியிட்டு ,  சிவசங்கர் பாபா இமேஜை காலி செய்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் நடுநிலையாக விவாதத்தை முழுமையாக − சிவசங்கர் பாபாவின் பண்பான விளக்கம் உட்பட − ஒளிபரப்பினர்

அந்த கால,கட்டத்திலக , யாகவா vs சிவசஙகர்  பாபா.  வென்றவர்,யார் என்ற கேள்விக்கு ,  தனது பண்பால் வென்றவர் பாபா என பதிலளித்து இருந்தார் லேனா தமிழ்வாணன் ( கல்கண்டு )

எந்த பொறுப்பும் ஏற்காமல் வெறும் ஹிட்ஸ்களுக்கான பொய்களைப்பரப்பும் இணைய ஊடகங்களை நம்பி அச்சு இதழ்களையும் ,  தொலைக்காட்சி சானல்களையும் அழிய விட்டுவிடக்கூடாது



Wednesday, June 16, 2021

எழுத்தாளனைத் தாண்டுதல்

 சாருவின் எழுத்தை ஏன் இன்னும் யாரும் தாண்டிச் செல்லவில்லை என்றொரு விவாதம் சாருவுடனான உரையாடலில் எழுந்தது

சமீபத்தில் ஜெயமோகன் வாசகர்களால் நடத்தப்பட்ட ஒரு சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் அனைத்தும் ஜெயமோகன் எழுத்தை போலி செய்ய முயல்பவை என்ற விமர்சனம் எழுந்தது

    ஜெயமோகனைத் தாண்ட வேண்டும் என்ற சிலரது விழைவு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தியுள்ளது

   ஆனால் சாரு இந்த போக்கை ஊக்குவிப்பதில்லை

சமீபத்தில் சாருவின் நல்லதொரு வாசகரான காயத்ரி எழுதிய கதை ஒன்றை சாரு பகிர்ந்திருந்தார்.

பெரிதும் வரவேற்பைப் பெற்ற அந்த கதை , வித்தியாசமான கதைக்களம் கொண்டது.   வாழ்க்கை பற்றிய கேள்விகள் , மரணம் குறித்த பார்வை என ஆழமான கதை .  வித்தியாசமான சடங்குகள் ,  கலைச்சொற்கள் என புதிய அனுபவம் தந்த கதை.

சாருவைத் தாண்ட வேண்டும் , அவரை போலி செய்ய வேண்டும் என்ற எத்தனம் சிறிதும் இல்லாததால் வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது

அதேபோல ராம்ஜி நரசிம்மனின் சிறுகதை .  கதையின் கடைசி வரியில் நிகழும் திறப்பு என்ற சிறுகதையின் செவ்வியல் வடிவத்தில் கச்சிதமாக பொருந்தும் கதை.  

இதுவுமே சாரு பாணியில் இருந்து மாறுபட்ட கதை


அராத்து எழுதுவதில் சமகால பார்வை , சமகால உறவுச்சிக்கல்கள் என இருக்கும்,கதை சொல்லாடலில் சாருவுக்கே பிடிக்காத அளவுக்கு ஆங்கில கலப்பு இருக்கும் . அந்த பிழைகள் (?!) கதைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுப்பது வேறு விஷயம்.

இவருமே சாருவை போலி செய்ய முயல்வதில்லை

நிர்மலின் அறிவுப்பூர்வமான தர்க்கவியலான எழுத்து வேறுவிதம்

செல்வகுமார் கணேசன் , கருந்தேள் ராஜேஷ் ,  யாரையோ குளிர்விக்க சாருவிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற சில எழுத்தாளர்கள் என யாருமே சாருவை தாண்டவோ அவரை நகல் செய்யவோ முயல்வதில்லை

திருக்குறளை தாண்ட முயலாமல் , தமிழுக்கு தத்தமது பாணியில் வளம் சேர்த்த புலவர்கள் போல ஜீரோ டிகிரியை , ராசலீலாவை , எக்சைல் நாவலை படித்து ஒரு உத்வேகம் பெற்று தமது பாணியில் எழுதுவதே நல்லது.   ஜீரோ டிகிரியை தாண்ட வேண்டும் என்பது வேண்டாம் என இவர்கள் நினைக்கிறார்கள்

அதற்காக எல்லோருமே இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை

சிலர் பாலகுமாரனை மாதிரி , சுஜாதா மாதிரி எழுதி பிரபலமாக இருக்கிறார்கள். ஜெயமோகனைத் தாண்ட விரும்புவோரும் உள்ளனர்


இரண்டு சிந்தனைகளுமே இருகககட்டுமே ? நல்லதுதானே




   



Saturday, June 12, 2021

நித்யானந்தா அளித்த வைரம்

 நித்யானந்தா ஒரு காலத்தில் மீடியாவின் டார்லிங் ஆக இருந்தார்.  அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கட்டுரைகள் அல்லது செய்திகள் வரும்.   

விஜய் டிவியில் காலை எட்டுமணிக்கு அவரது சொற்பொழிவு ஒளிபரப்பாகும்.   அலுவலகத்துக்கு லேட்டாய்ப் போய்த் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என அந்த சொற்பொழிவை கேட்டு விட்டுதான் கிளம்புவேன்

பிறகு சர்ச்சை கிளம்பியதும் ஊடகங்கள் அவரை கைவிட்டன.  நாம் பாரக்கப்போவது இதுவல்ல.


மீடியாவில் அவர் பரபரப்பாக இருந்தபோது அவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன்.;

அது எனக்கு மிகவும் உதவியது

ஒருவன் கடற்கரையில் அமர்ந்தபடி  பொழுதுபோக்கிக் கொண்டு இருந்தான். விளையாட்டாக , பக்கத்தில் இருந்த கூழாங்கற்களை கடலில் வீசியபடி இருந்தான்.

அரைமணி நேரம் ஆனது.  பக்கத்தில் இருந்த கூழாங்கற்கள் காலியாகும்  நிலையில் கடைசி கற்களை கவனித்து அதிர்ச்சி அடைந்தான்.  காரணம் , அவை சாதாரண கற்கள் அல்ல  .   விலை உயர்ந்த வைரக்கற்கள்.  அதை அவன் மூளை உணர்ந்தாலும் , அரைமணி நேர பழக்கம் காரணமாக கை அனிச்சையாக மேலும் இரண்டை கடலுக்குள் எறிந்தது.

 எஞ்சி இருந்த கடைசிக்கல்லை விரக்தியாகப் பார்த்தான்.  பெரிய பொக்கிஷத்தையே அல்லவா தொலைத்து விட்டோம் என நினைத்தபடி அதையும் கடலுக்குள் எறிந்து விட்டு கிளம்பினான்.


இதுதான் நித்யானந்தர் சொன்ன கதை

இதன்பிறகு அவர் சொல்லும் விளக்கம் சுவாரஸ்யம்


விழிப்புணர்வு இல்லாமையால் அவன் வைரங்களை வீசினான்.  ஆனால் விழிப்புணர்வு வந்தபிறகாவது நிதானித்து இருந்தால் கடைசி ஒரு கல் அவனுக்கு கிடைத்திருக்கும்.   அந்த ஒரு கல் அவன் வாழ்க்கைக்கு போதுமானது.

போனதைப்பற்றி கவலைப்படாமல் ,  கடைசியாக கிடைத்த ஒரு கல்லை வைத்து அவன் ராஜாவாக வாழ்ந்திருக்க முடியும் என்பது அவரது விளக்கம்;

     காலம் கடந்து விட்டது என்ற எண்ணமே பல பொக்கிஷங்களை நம்மிடம் இருந்து பறித்து விடுகிறது

      நடைப்பயிற்சி நல்லதுதான் சார் , இதெல்லாம் சின்ன வயசுலயே தெரிஞ்சு இருந்தா நல்லா இருந்திருக்கும் ,  பள்ளிப்பருவத்திலேயே பேச்சுக்கலை ஆர்வம் வந்து இருந்தா கலக்கி இருக்கலாம் , நாலு கழுத வயசாய்ருச்சு இப்ப ஆர்வம் வந்து என்ன பண்றது என நினைத்து பல நல்லவற்றை நாம் பின்பற்றுவதே இல்லை


நல்லவற்றை தொடங்க இப்படி நினைக்க வேண்டியதே இல்லை.    தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் தனது வயதான காலத்திலும் புதிய மொழிகளை கற்றுக்கொள்ள முயன்றார்.  இதெல்லாம் சின்ன,வயசில் செஞ்சிருக்க வேண்டியதுஎன நினைக்கவில்லை


கல்லூரி முதலாண்டு படிக்கும்போது ,  கை எழுத்துப் பயிற்சி செய்து எழுத்தை அழகாக்க சோம்பலாக இருக்கும். இதெல்லாம் ஸ்கூல் டேய்ஸ்ல செஞ்சிருக்க வேண்டியது என நினைப்போம்


அந்த நினைப்பு கூடாது.   எப்போதும் எதையும் கற்கலாம். புதிதாக ஆரம்பிக்கலாம்

ஒரே மாதிரி வாழாமல் புதிதுபுதிதாக கற்பது வாழ்க்கையை உற்சாகமாக ஆக்கும்


எப்போது கேட்டாலும் ஏதாவது ஒன்றை ஆரம்பித்து சில நாட்கள் ஆகி இருப்பது நல்லது












Tuesday, June 8, 2021

அன்றாட வாழ்வின் அழகியல் − கவிதை நூல் பார்வை

 

   உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது  எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி  அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும் சில நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அப்படி நம்பிக்கையூட்டும் கவிஞர்களில் ஒருவர்தான்  " மதார் "

இவரது வெயில் பறந்தது கவிதை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற நூலாகும்.


போலித்தனமற்ற  சிடுக்குகளற்ற இயல்பான குரலில் இக்கவிதைகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

  விழிப்புணர்வுடன் இருந்தால்  காற்றில் பறக்கும் சிறு இலை கூட அரிய மெய்ஞான தரிசனம் அளித்து விடும் என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.


ஒரு கவிஞன் அன்றாட சம்பவங்களில்கூட இந்த அரிய கணத்தை கண்டு கொள்கிறான


பலூன்  இளைக்கும்போது கேட்கிறது 

அகக்காற்றை அழைத்துப் போகும் 

புறக்காற்றின் அவசரம்

என்று ஒரு கவிதை.


ஒரு கணத்தை ஒரு தருணத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.  இது நம்மை எடுத்துச் செல்லும் உயரங்கள் அதிகம்.

   நதி கடலில் சங்கமிக்கச் செல்லும்போது கடல் சில அடிகள் முன்,நகரந்து நதியை தன்னுள் இழுத்துக் கொள்ளும் . காதல் காமம்  ஆன்மிகம் என  அனைத்துக்கும் பொதுவான  சங்கமம் ,  அழிவின்மை , சாஸ்வதத்தன்மை என பலவற்றை இந்த சில வரிகள் நினைவு படுத்துகின்றன

 


எங்கிருந்தோ 

ஒரு பந்து வந்து 

கைகளில் விழுந்தது  


தான் இன்னாருக்குச் சொந்தம் 

என்று அறிவித்துக்கொள்ளாத 

பந்து 

பூமியைப் போலவே இருந்தது 


உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

 ஒருமுறை 

ஒரேயொரு முறை 

சிரித்தது


எங்கிருந்தோ வந்து விழும் பந்து வழியாக கவிஞன் காணும் தரிசனமும் அதை அந்த பந்தும் அக்னாலட்ஜ்  செய்வதும் கவிதையும் யதார்த்தமும் படைப்பாற்றலும் கைகுலுக்கும் அழகான இடம்



அமைதியான ஒரு அறை 

சுற்றி இருட்டு 

ஒரு மெழுகுவர்த்தி தரும்

 நம்பிக்கையில் 

அமர்ந்திருக்கும் பெண்

 திரியில் விளக்காடுவதை 

அவள் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருப்பாள்

 ‘ஒரு பனிக்காலத்து மாலை 

தரையில் கண்டெடுத்த 

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதின் அவசியம் இப்போது புரிகிறது’ 

என அவள் தனது டைரியில் எழுதுகிறாள் எழுதி முடித்ததும் 

அறைச்சுவர் நான்கும் 

அவளை நெருங்கி வந்து அமர்கின்றன


இந்தக்கவிதையில் வரும் பெண்ணும் , பனிக்கால"மாலையும் , இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் அழகான காட்சிப்படிமங்களாக மனதில் தைத்துவிடுகின்றன

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதன் அவசியம் என்பது சுவாரஸ்யமான வரிகள்.

நல்லவேளை ,  தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிடாமல் பத்திரப்படுத்தினோமே என ஆறுதல் பெருமூச்சு விடுகிறாள்.  பத்திரப்படுத்தாமல் போனோமே என வருந்துகிறாள் என்ற இரு சாத்தியங்களுமே கவிதைக்குள் உள்ளன.  உண்மை என்ன என்பது ஒருபோதும் வெளிவரமுடியாத,ரகசியம் என்பதை கடைசி வரிகள் சொல்கின்றன.


இது பூடகமான கவிதை என்றால் அடுத்து சற்று வெளிப்படையான கவிதை 



நதிக்கு ஓடும் பைத்தியத்தை 

சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான் 

பைத்தியம் தெளிபவனின்

 மண்டையில் நிகழும் 

மாற்றங்களுக்கு 

ஒப்பானது அது

இந்த அனுபவம்,பலருக்கும் கிடைத்திருக்கும்..


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது 

தனது ஒற்றைப் பார்வை 

வாயிலாகவே

 மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது 

நான் வெறுமனே

 காகத்தின் கண்களை 

கூர்மையாகப் பார்க்கிறேன்

உலகை அளக்கும் காக்கையின் கண்கள் வழியே உலகைக்காணல் என்பது அழகான பார்வை..   


முகத்திற்குத் 

தண்ணீர் ஊற்றினேன்

 வெயில் கழுவினேன் 

மீண்டும் ஊற்றினேன் 

வெயில் கழுவினேன்

வெயில் என்ற அருவம், உருவமாக மாறும் தருணம்

கதவும் நானும் 

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் 

ஞாபகப்படுத்திச் சொன்னேன் ‘மரம்தானே நீங்க’ 

கதவு சொன்னது

ஏ! குட்டிப் பயலே’

கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைப்பார்த்தால் கல் தெரியாது


நாற்காலி ,  கதவு என பார்ப்பவர்களுக்கு அவை வெறும் ஜடப்பொருட்கள்தான்.   அவை எல்லாம் மரங்கள் என அடையாளம் கண்டு கொள்ளவும் சிலர் உண்டு என்பதைவிட  அப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கு எப்படிப்பட்ட  மனம் தேவை என்பதுதான் கவிதை..   இயற்கையை நாம் அறியும்போது இயற்கையும் நம்மை அறிகிறது என்ற ஜென் கணம் கடைசிவரியில் சரேல் என நிகழ்கிறது

நமத்துப் போன தீக்குச்சி 

ஒன்றுக்கும் உதவாது 

எனச் சபித்து எறிகிறாய்

 அது அமைதியாக விழுகிறது

 எரியாத காட்டின் 

பறவைக்கூட்டிற்குக் கீழ்

    மிகப்பெரிய சாத்தியக்கூறு ஒன்று நிகழாமல் போவதன் காட்சி வெளிப்பாடு


சரியான  கண்கள் பார்வை இருந்தால் அன்றாட கணங்களும் அற்புதம்தான் ,  வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான் என்ற இக்விதை தொகுப்பின் சாரத்தை இக்கவிதை சுட்டுகிறது


சன்னலைத் திறந்ததும்

 ஒரு பெரும் ஆச்சர்யம் -  

ஆகாசத்தின் கதவா

 என் எளிய சன்னல்

மதார் அவர்களுக்கு வாழ்த்துகள்


வெயில் பறந்தது கவிதை நூல்   தவறவிடக்கூடாத ஒன்று












Saturday, June 5, 2021

கவர்ச்சி வில்லன்




 

அ  இ அ தி முவின் நட்சத்திர பேச்சாளராகவும் ,  எம ஜி ஆரின் நம்பிக்கைக்கு உரிய நண்பராகவும் திகழ்ந்தவர்  கவர்ச்சி வில்லன் என அழைக்கப்பட்ட கண்ணன்.

மதுரை வீரனில் ஆரம்பித்து எம்ஜிஆரின் கடைசிப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல எம்ஜிஆர் படங்களில்  நடித்துள்ளார்.

எண்பதுகளிலும் ரஜினி , விஜயகாந்த் , சத்யராஜ் என பலரது படங்களில் நடித்துள்ளார்


என்ன கொடுமை என்றால் ,  டிவிக்களில் இவர் நடித்த படங்களைப்பற்றி அறிவிக்கையில் இவர் பெயரைச் சொல்வதில்லை.   மற்றும் பலர் என்பதில் இவரை அடக்கி விடுகிறார்கள்


மதுரை வீரன் படப்பிடிப்பின்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவரின் கம்பீரமான  தோற்றத்தைப்பார்த்து எம் ஜி ஆர் அழைத்து நடிப்பு சான்ஸ் அளித்தார்.  கண்ணன் என பெயரும் சூட்டினார்.

அவரது கம்பீரமான தோற்றத்தால் கவர்ச்சி வில்லன் என அழைக்கப்படலானார்;

சின்ன வயதிலேயே எம்ஜிஆர் ரசிகரான இவர்  அரசியலிலும் எம்ஜிஆர்கூடவே இருந்தார்.   ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தார்

அஇஅதிமுக பேச்சாளராக இருந்த இவர் அதிமுக மேடையிலேயே உயிரை இழந்தது குறிப்பிடத்தக்கது


மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.  பிறகு சிகிச்சை பலனின்றி காலமானார்

      இவரை அதிமுக  பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

   வரலாற்று ஆவணமாக திகழத்தக்க இவரது அரிய புகைப்படங்கள்  (  எம்ஜிஆர் கலைஞர் அண்ணா போன்ற தலைவர்களுடன் எடுத்தவை )    ஷீல்டுகள் போன்றவற்றை இவரது குடும்பத்தினர்  எடைக்குப் போட்டுவிட்டனர்

           இவரது மகனான மகேஸ்வரனும் திரைத்துறையில் மோதிப்பார்த்தவர்தான்.  இவருக்கு வெற்றி வசப்படவில்லை

    இது போன்ற கசப்பான அனுபவங்களால் புடம்போடப்பட்டவராக  கண்ணனின் பேரன்  பாலாஜி மகேஸ்வர் திகழ்கிறார்.

   இவர் சிறந்த போட்டோகிராபர்.    குறிப்பாக  அழிந்து,வரும் அல்லது அழிந்த திரையரங்குகளின் அரிய  புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார்


அந்த புகைப்படக்கண்காட்சியை சில ஆண்டுகள் முன் சென்னையில் பார்வையிட்டேன்


தாத்தா ,  மகன் ,  பேரன்  என மூன்று தலைமுறைகளாக சினிமா மீதான இந்த passion  வியக்கத்தக்க ஒன்று


    


Thursday, June 3, 2021

பிசாசு −2 மிஷ்கின் அப்டேட்

 பிசாசு படம் அனைவருக்கும் பிடித்த படம்.

இயல்பான நகைச்சுவை ,  மனித நேயம் , உறவுகள் , அற்புதமான காதல் , ராதாரவியின் அழகான நடிப்பு போன்றவற்றை ஒரு பேய்ப் படத்தில் பார்ப்போம் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதில் வரும் ஆட்டோ டிரைவரை யாரும் மறக்க முடியாது


ஆனால் பிசாசு −2 படம் ,  பிசாசு முதல் பாகத்தின் நீட்சி அன்று என மிஷ்கின் கூறியுள்ளார்


கண்ணியமான காதல் , தாய்ப்பாசம் , மனிதநேயம் என கதாநாயன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நச் என சொன்னது முதல் பாகம்.   இரண்டாம் பாகம்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம்.  இதற்காக ஆண்ட்ரியா  கடுமை உழைத்துள்ளார். அவருக்கு நல்ல,பெயர் கிடைக்கும்.   அவரது திரை வாழ்வின் முக்கியமான படமாக இருக்கும்  விஜய் சேதுபதி கேரக்டர் ஆச்சர்யப்பட வைக்கும்


முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா வருகிறார்.   சந்தோஷ் பிரதாப்பும் உண்டு


இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்


Wednesday, June 2, 2021

ஓர் ஆவி ஆராய்ச்சி :)

 அறிவியலின் சுவாரஸ்யம் என்னவென்றால் சில அடிப்படையான விஷயங்கள்கூட நமக்குத் தெரியாது.  அது தெரியாது என்பதே எப்போதாவதுதான் தெரியும்

உதாரணமாக தண்ணீர் எந்த வெப்பநிலையில் ஆவியாகும் ?

  பலர் 100 டிகிரி செல்சியஸ் என்பர்.  

கொதிநிலை என்பது வேறு ,  ஆவியாதல் என்பது வேறு 

தண்ணீர் 100 டிகிரியில் கொதிக்க  ஆரம்பிக்கும்,,கொதித்து ஆவியாகும் அதற்குமேல்  என்னதான் சூடாக்கினாலும் வெப்பநிலை உயராது.    ( மலைகளில் இதை விட குறைந்த வெப்பநிலையில் கொதிக்க ஆரம்பிக்கும்.  சாதாரண வளி மண்டல அழுத்தத்தைவிட அதிக அழுத்தம் இருந்தால்   100 டிகிரியைவிட அதிக வெப்பநிலையில் கொதிக்கும்  − உதாரணம், , பிரஷர் குக்கர்  120 டிகிரி வரை தண்ணீர் தாக்குப்பிடிக்கும்)

ஆனால் ஆவியாதலுக்கு  அவ்வளவு வெப்பம் தேவையில்லை..   கொதிக்காமலேயேகூட  தண்ணீர் ஆவியாகலாம்்

கீழே சிந்திக்கிடக்கும் தண்ணீர் , தரை வெப்பத்தை பயன்படுத்தியேகூட ஆவியாகும்.  நமது உடல் வெப்பத்தை பயன்படுத்தியேகூட வியர்வை ஆவியாகிவிடும்

காற்றோட்டம் ,  தண்ணீரின் பரப்பளவு ,காற்றின்  ஈரப்பதம் , வெப்பம் ஆகியவை ஆவியாதலை தீர்மானிக்கினறன

மின்விசிறி சுழன்றால் துணி எளிதில் உலர்கிறது.  காரணம் காற்றோட்டம்

ஒரு குவளையில் இருக்கும் நீர் ஆவியாவதற்கு பல நாட்கள் ஆகும்.  அதே தரையில் கொட்டினால்  ( மண் தரை அல்ல ) உடனே உலரும்.   காரணம் பரப்பளவு


மழைக்காலங்களில் துணி உலர அதிக நேரம் ஆகிறது.  காரணம் காற்றின் ஈரப்பதம்

வெயிலில் உலர்த்தினால் அந்த வெப்பத்தில் விரைவாக உலர்கிறது


    கொதிநிலை ,  ஆவியாதலுக்கு இடையேயான வித்தியாசத்தை குழந்தைகளுடன் பேசுங்கள்;

     கொதிக்கும்போது ஆவியாகும்  ஆனால் அனைத்து ஆவியாதலுக்கும் கொதிப்பு தேவையில்லை






Sunday, May 30, 2021

நிபுணத்துவம் அடைய எவ்வளவு மணி நேரம் தேவை ?

 ஒரு விஷயத்தில்  மேதைமை அடைய 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்கிறார் மால்கம் கிளாட்வெல்

எளிமையாக சொல்லவேண்டுமென்றால்

10000 / 24  =  கிட்டத்தட்ட  417 நாட்கள் தூங்காமல் சாப்பிடாமல் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.  அது சாத்தியமில்லை

தினசரி மூன்று மணி நேரங்கள் வீதம் ஒன்பது வருடங்கள் பயிற்சி எடுத்தால் ஒன்பது வருடங்களில் பத்தாயிரம் மணி நேரம் வந்து விடும்.

அதாவது தனது ஐந்து வயதில் ஒருவன் இசை , கிரிக்கெட் , வணிகம், கல்வி என ஏதேனும் ஒன்றில் ஈடுபடும் சூழல் இருந்தால் பள்ளிப்பருவத்தில் அந்தந்த துறைகளில் பிரகாசிப்பான்.  ஆசிரியர்கள் கவனிப்பு, புகழ் , தன்னம்பிக்கை ,  உயரக நட்புசூழல்என நல்ல விஷயங்கள் நடக்கும்.  பிற்காலத்தில் ஜொலிப்பான்

சற்று தாமதமாக , அதாவது பத்து வயதில் ஈடுபாடு ஆரம்பித்தால் , பயிற்சி செய்யும் காலத்தைப்பொறுத்து ,  அவனும் சாதனையாளராகலாம்

ஏஆர் ரகுமான் ,  டெண்டுல்கர் போன்றோரின் குடும்ப சூழல் இந்த பத்தாயிரம் மணி நேரத்தை அவர்களுக்கு அளித்ததை கவனியுங்கள்

ஜெயமோகன் தனது வெகு  சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் சூழல் இருந்ததாக சொன்னது நினைவிருக்கலாம்

ஒருவருக்கு 20 வயதில்தான் இந்த ஒன்றில் ஆர்வம் ஏற்படுகிறது , பயிற்சி எடுக்கும் சூழல் அமைகாறது என்றால் இரவுபகலாக கடுமையாக உழைத்து இந்த பத்தாயிரம் இலக்கை அடைதல் வேண்டும்

சாரு நிவேதிதா போன்ற பல எழுத்தாளர்கள் வெறித்தனமான வாசிப்பு மூலம் இந்த இலக்கை அடைந்தனர்

தாமதமாக தமது பயணத்தை தொடங்கி நாற்பது வயதுகளில் இலக்கை அடைந்தோரும் உண்டு ( எம்ஜிஆர் , நடிகர் விக்ரம் சில உதாரணங்கள)

அறுபது வயது வரை பயிற்சி செய்து,, ஓய்வுக்குப்பின் ஜொலிப்போரும் உண்டு


பெரிய சாதனையெல்லாம் வேண்டாம். ஒரு செயலில் நிபுணத்துவம் அடைந்தால் போதும் என்றால் அதற்கு தேவையான காலம் எவ்வளவு ?


நிபுணத்துவத்தின் நான்கு படிக்கட்டுகள் என ஜேம்ஸ் ஆலன் இப்படி சொல்கிறார்

1 பிடிவாதம் 2 தீவிர ஈடுபாடு  3 ஈடுபாடு மறைதல்  4 ஓய்வு

முதலில் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும்.  மனம் அதில் ஈடுபடாமல் முரண்டு பிடிக்கும்.   வெட்டியாக இதில் ஈடுபடுகிறோமோ , நாளைக்கு செய்யலாமே என்றெல்லாம் தோன்றும்  ஆனால் பிடிவாதமாக அதில் இருக்க வேண்டும் இது முதல் நிலை

அதன் பின் மனம் சற்று அடங்கும்.  அந்த செயலை அழகாக எளிதாக செய்ய மனமே யோசனைகள் தர ஆரம்பிக்கும் . இந்த  ஈடுபாடு இரண்டாம் நிலை

சைக்கிள் , கார் , பைக் போன்றவை நன்கு பழகியபின் கவனமே இல்லாமல்கூட அவற்றை இயக்க முடியும்.   ஈடுபாடு தேவையற்ற நிலை. இது மூன்றாம் நிலை


கவிதை கதை என நிபுணத்துவம் அடைந்தபின் எழுதவேண்டும் என்ற,முனைப்பு இல்லாதபோதுகூட கற்பனைகள் ஊற்றெடுக்கும்.  உழைப்பு தேவைப்படாத இந்த நிலை நான்காவது நிலை


முதல் இரண்டு நிலைகளை அடைய 48 நாட்கள் ஆகும்


48 நாட்கள் ஒரு விஷயத்தை இடைவிடாது செய்தால் மனம் அடங்கி , ஒத்துழைக்க,ஆரம்பித்து விடும்


அதற்குப்பிறகு அடுத்த நிலைகளுக்கு செல்வதும் உறுதி  .  எடுத்துக்கொள்ளும் வேலையைப்பொறுத்து , நான்காம் கட்டத்தை அடையலாம்

48 நாட்கள் தாக்குப்பிடிப்பது முக்கியம்

 









Friday, May 28, 2021

ஒரு கரும்பின் பயணம் − காமத்தை கையாள்தல்

 காஞ்சிப் பெரியவர் என்றால் அவரை கடவுளாக நினைப்பவர்களும் , இண்டலக்சுவலாக நினைப்போரும் உண்டு.

இன்னொருபுறம் அவரைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களும் கணிசமாக உண்டு.

என்னைப் பொருத்தவரை அவரது எழுத்துகளும் உரையாடல்களும் எனக்குப்பிடிக்கும்.

சமீபத்தில் படித்த திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை என்னைக்கவர்ந்தது.    

ஒருவர் மகாபெரியவரிடம் கேட்டார்.  

மன்மதன் கையில் கரும்பு இருக்கிறது.

அதேகரும்பு காமாட்சி தேவி கையிலும் இருக்கிறது.  இதன் தாத்பர்யம் என்ன?

மகாபெரியவர் சொன்னார்


மன்மதன் கையில் இருக்கும் கரும்பு வில் , பாலியல் ஈர்ப்பை தோற்றுவிக்கக்கூடியது.

அவனது கரும்பு,வில்லில் இருந்து பாயும் மலர்க்கணைகளால்  தாக்கப்பட்டவர்கள் பந்த பாசங்களில் எதிர்பால் கவர்ச்சியில் சிக்குவது உறுதி

ஆனால் அவன் ஒரே ஒருவரிடம் தோற்றான்.   சிவன் மீது பாய்ந்த அவனது கணைகள் அவர்தம் தவத்தை கலைக்கவில்லை.  அவர் மோகவயப்படவில்லை  அவனை எரித்துசாம்பலாக்கி விட்டார்

வென்றவர்க்கு தோற்றவரின் ஆயுதங்கள் சொந்தம் என்ற அடிப்படையில்  , கரும்பு சிவன்வசம் சென்றது. 

இப்படியாக அது காமாட்சியை வந்தடைந்தது

இதன் நுட்பம் என்னவென்றால் ,  காமமே பிரதானம் என்பது மன்மதன் தரப்பு

அந்த காமமானது அன்பு பாசம் மக்கட்செல்வம் என சற்று உயர்நிலை அடைந்தால்தான் மனித குலம் செழிக்கும்

பாலினக்கவர்ச்சியே கூடாது என்ற சிவனது தரப்பு அன்றாட,வாழ்வுக்கு பொருந்தாது

இதனால்தான் மன்மதனின் கரும்பை காமாட்சியும் ஏந்துகிறாள்


இப்படி சொல்கிறார் மகாபெரியவர்


நமது முந்தைய பதிவில் இதை இலக்கியரீதியாக அலசியது நினைவிருக்கலாம்

Thursday, May 27, 2021

ஜெயமோகனின் "அறம்"

 ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகள் தமிழ் இலக்கிய மேடைகளில் மட்டுமல்ல. இலக்கியத்துச்சம்பந்தமற்ற மேடை சொற்பொழிவுகளிலும் பட்டிமன்ற மேடைகளிலும் கூட மேற்கோள் காட்டப்படுகின்றன

யானை டாக்டர் கதையை எழுதியவர் ஜெயமோகன் என்பதுகூட அறியாதவர்கள்  அதை ஒரு நாட்டுப்புறக்கதையாகவோ காற்றுவாக்கில் காதில் விழுந்த உண்மைச்சம்பவமாகவோ நினைத்து மேடைகளில் பேசுவதுண்டு.  


       நூறு நாற்காலிகள் , வணங்கான் போன்றவை சமூக நீதி அடிப்படையில் முக்கியமானவை

    சோற்றுக்கணக்கு , உலகம் யாவையும் , ,கோட்டி , ஓலைச் சிலுவை போன்றவை வரலாற்று மனிதர்களை அவர்களது அறவிழுமியங்களோடு முன் வைப்பவை

    தனி மனித அற விழுமியங்களுடன் பிரபஞ்ச பேரறம் இணைந்து செயல்படுவதை இக்கதைகளில் காண்கிறோம்

உதாரணமாக....

புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அடிதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்.

       


தலைக்குமேலே ஓரு பிரம்மாண்டமான உறுமல் ஒலியை சாமர்வெல் கேட்டார். அப்போது அவரை அறியாமலேயே ’ஆமென்’ என்று சொன்னாராம். அவரது தலைக்குமேல் இருந்த ஒரு பனிமலை அபப்டியே பெயர்ந்து ராட்சத அருவிபோல கீழே வந்தது. அவருக்கு மேலே இருந்த ஒரு பனிபாறை நீட்டல் அந்த பனிவெள்ளத்தை இரண்டாக பிளந்தது. அந்த பிளவில் சாமர்வெல் நிற்க இருபக்கமும் இருந்தவர்களை அந்த பனிவீழ்ச்சி அள்ளிக்கொண்டு அதலபாதாளத்தில் இறங்கிச் சென்று மறைந்தது.  பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.

அதேபோல  கதைகளில் வரும் சிறிய பாத்திரங்களின் தன்னறமும் மலைக்க வைக்கிறது..

உதாரணமாக...

    அடுத்த படுக்கையில் இருகால்களும் சிதைந்த ஒருவன் கிடந்தான். அவனுடைய கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து எழுந்தார். அவன் கையை அசைத்து ‘பரவாயில்லை, ஓய்வெடுத்தபின் வாருங்கள்’ என்று சைகை செய்தான்


மேலும் பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.



மத்துறு கதையில் பேராசியரின் அற விழுமியங்களுக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்ட − வாழ்க்கையில் தோல்வியுற்றவன் என்று கருதப்பட்ட − ஒரு மாணவனை காண்கிறோம்


இதில் வரும் மனரீதியாக துயரை உடல்ரீதியாக அனுபவிக்கும் ஒரு மாமனிதரை  பெரு வலியில் காண்கிறோம்.  அதில் வரும் சிறிய பாத்திரமான,வடநாட்டு பெண்மணியின் பெருங்கருணையில் நெகிழ்கிறோம்.

அறம் கதையில் மனசாட்சி உலுக்கப்படும் தருணத்தை காண்கிறோம்


தனக்கான அற விழுமியங்களை கண்டுகொண்டு அதன்படி வாழ்ந்த மனிதர்களின் கதையை கோட்டி , வணங்கான் , நூறு நாற்காலிகள் , உலகம் யாவையும் , சோற்றுக்கணக்கு , மத்துறுதயிர், யானை டாக்டர் , ஓலைச்சிலுவை போன்ற கதைகளில் பார்க்கிறோம்

அறம் , பெருவலி , தாயார் பாதம் போன்ற கதைகளில் பிரபஞ்ச பேரறத்தை காண்கிறோம்

  சற்று வித்தியாசமாக மிளிர்வது மயில் கழுத்து சிறுகதை.    தனக்கான சுயதர்மத்தை  கண்டு கொள்ளும் அற்புத தருணத்தை பதிவு செய்யும் கதை இது


ஓலைச்சிலுவை , சோற்றுக்கணக்கு , கோட்டி கதையின் இறுதிப்பகுதிகள் ஆகிவற்றிலும் இந்த தருணங்கள் உண்டு


ஆனால் முழுக்க முழுக்க அந்த தேடலை  தன்னை அறிவதற்கு முன்பான தத்தளிப்பை அவஸ்தையை வேதனையை பதிவு செய்யும் கதை


ராமன் மற்றும் பாலசுப்ரமணியன்,ஆகிய இருவரையும் வாசகனால் நெடுங்காலம் மறக்க முடியாது.


இவர்கள் இடம்பெறும் இரு,கதைகளையும் ( தாயார் பாதம் , மயில் கழுத்து )சேர்த்து வாசிக்கும்போது கிடைக்கும் திறப்பு வெகு அழகானது,

   இசைக்கலையில்  மேதைமை ,  பணம் இல்லாவிட்டால் என்ன சரஸ்வதி கடாட்சம் மிக்க பெண் இருந்தால்போதும் என நினைக்கும் மனம் கொண்ட தந்தை  , சரஸ்வதி தேவிக்கு போன ஜென்மத்தில் மட்டுமல்ல இப்பிறவியிலும்,ஆண்டு தோறும்,தேனாபிஷேகம் ,  தந்தை மீதான குருபக்தி எனமேன்மையே  உருவெடுத்து வாழ்வதுபோன்ற ஒருவர் , சரஸ்வதிதேவி நேரில் வரும்போது மல அபிஷேகம் செய்கிறார்


ஆனால்   பெண் போதையில் பாலியல் ஈர்ப்பில் சிக்கி சீரழிந்து கிடந்த ராமன் , அந்த நஞ்சை அமுதமாக்கி வென்று செல்கிறார்


அந்த  நஞ்சு இல்லாவிட்டால் அவர் எழுத்தாளரே அல்லர்.  கோடிக்கணக்கான சாமான்யர்களில் ஒருவர்

ஆனால் அந்த நஞ்சு ரசவாதம் அடையாவிட்டாலும் அவர் அழிந்திருப்பார்.


  சரியான புள்ளியில் அவர் தனது தர்மத்தை கண்டுகொள்கிறார்

    எதையும் தர்க்கரீதியாக பார்க்கும் நிதானமான மனம் கொண்ட பாலசுப்ரமணயனிடமும் மாற்றம் நிகழ்கிறது


தாயார் பாதத்தில்  குரு பக்தி என்ற பால் திரிந்து விஷமாகாறது


மயில் கழுத்தில்  விஷம் பதப்படுத்தப்பட்டு வைரமாகிறது


மயில் கழுத்தில் சில வரிகள்


      


நாய் மாதிரின்னா வாலச்சுழட்டிண்டு பின்னால அலைஞ்சர். அன்னைக்கு தலையிலே அடிச்சுக்காத ரைட்டர்ஸே இல்ல. கரிச்சான்குஞ்சு என்னைக்கூப்பிட்டு டேய் அவன் பிறவிரைட்டர்டா. அவனுக்கு வெக்கமும் பயமுமா ஆத்தாம கெடக்கு. துணிஞ்சு ஒரு நாலஞ்சு தாசிகளண்ட கூட்டிண்டு போ. தெளிஞ்சுட்டுதுன்னா இடுப்புக்குமேலே யோசிக்க ஆரம்பிப்பான்னார். 


தோத்து கேவலப்பட்டு சீரழிஞ்சுட்டேன்.மண்ணுல கால வைக்கவே முடியாதவனா ஆயிட்டேன். எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்…அந்தமாதிரி எனக்குள்ள ஏறிட்டுது வெஷம்… மூணு வருஷமா எரிஞ்சு கரிஞ்சுட்டிருக்கேன் பாலு…’


    ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? 



இந்த தொகுப்பை படித்தவுடன் நமக்கு தோன்றுவது இதுதான்


எ்ததனை மகத்தானவன் மனிதன்! கடவுளின் படைப்பில் இந்த ஓர் உயிருக்கு மட்டும் எவ்வளவு ஆன்ம வல்லமை சாத்தியமாகிறது! அவன் போக்க்கூடிய தூரம் எவ்வளவு அதிகம். அவனால் கொஞ்சம் கைநீட்டினால் மனிதகுமாரனின் கால்களை தொட்டு விடமுடியுமே

Tuesday, May 25, 2021

பென்னை அணுகுதல்

 

    பேனா விற்பனை என்ற அருங்கலை இன்று அழிந்து விட்டது.  சூப்பர் மார்க்கெட்டுகளில் ஓர் ஓரமாக பேனாவுக்கு இடம் ஒதுக்கியிருப்பர். அவற்றிலும்   ஜெல் , பால்பென் , ரோலர் பென் என்பவைதான் அதிகம்.   

    மை ஊற்றி எழுதக்கூடிய பேனாக்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது

        ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் ,  சாதாரண கடைகளில் பேனா வாங்கினால் after sales suppor கிடைக்காது.

     பேனாவுக்கெல்லாம் எதற்கு after sales support என்பதே அவர்களுக்கு தெரியாது

      விலையுயரந்த நல்ல பேனா என்றால் சிறு பழுதுகள் என்றால் தூக்கி எறிய முடியாது.  உதிரி பாகங்கள் தேவைப்படும்

      அந்த காலத்தில் எல்லாம் பைக் சர்வீஸ்போல பேனா சர்வீஸ் கடைகளும் இருந்தன  இன்று அருகி விட்டன

        டெல்லி மும்பை சென்னை பெங்களூரு என எல்லா ஊர்களிலும் ஆஙககாஙககு இப்படிப்பட்ட  கடைகள் உண்டு..   

      மதுரையில் சில கடைகள் உண்டு  அவற்றில் ஒன்றுதான் ஜான்சன் பென் செண்டர்

   மீனாட்சி அம்மன் ஆலயம் அருகே உள்ள கடை   1974ல் இருந்து செயல்படும் இக்கடை சிறிய கடைதான் என்றாலும் பெரிய கடைகளுக்கு மத்தியில் இன்றும் செயல்படுவது பாராட்டத்தக்கது ,  இது தொடர வேண்டும் என கடைநடத்துபவரிடம் சொல்லி விட்டு வந்தேன்  , சில பேனாக்களும் வாங்கிக் கொண்டு வந்தேன்  .  பேனாவில் எழுதும் கலை குறித்த சில டிப்ஸ்கள் வழங்கினார்;

  பழுது பாரப்பதற்கு தேவையான உதிரிபாகங்களையும் பார்வையிட்டு கிளம்பினேன்





 



  ,




Sunday, May 23, 2021

மறக்க முடியாத பிரார்த்தனை


 கடவுள் என ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாத ஒன்று


ஆனால் பிரார்த்தனைகள் நிகழ்த்தும் அதிசயங்களை அவ்வப்போது கேட்கிறேன் ,  நானும் அனுபவிக்கிறேன்


என் சிறுவயதில் , ஒரு முறை உறவினர் வீடு ஒன்றில் மொட்டை மாடியின் மேல் தளத்தில் சிமெண்ட் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.  திடீரென மழை மேகங்கள் சூழ்ந்தன.

மழை பெய்து சிமெண்ட் அடித்து செல்லப்பட்டால் அவருக்கு தாங்கவே முடியாத,நஷ்டம் ஏற்படும்

மழை பெய்தால்  இப்படி சேதம் ஏற்படும் சூழல் பிற்காலத்தில் வந்தபோது பெரிய பாலித்தீன் ஷீட்டுகளை உடனே வாங்கி"வந்து போர்த்தி விட்டு சேதத்தை தவிர்த்த அனுபவம் எனக்குண்டு;

ஆனால்  நான் சொல்லும் சம்பவம் நடந்த இடம் ஒரு கிராமம்.  பாலித்தீன் ஷீட்டுகளோ வேறு  ஏற்பாடுகளோ செய்ய முடியாத சூழல்


அப்படி ஒரு கையறு நிலையில், பிராரத்தனையையே"அவர் நம்பினார்

பிரார்த்தனை என்பது இயல்பான ஒன்று. ஆனால் இந்த சம்பவம் ஏன் மனதில் நிற்கிறது என்றால் அவர் யாரிடம் பிரார்த்தனை செய்தார் என்பதால்தான்;

அவர் திருநீறுடன் காட்சி அளிக்கும் ஹிந்து  ஆனால்  அவர்,பிராரத்தனை செய்தது மேரி மாதாவிடம்;

என்ன ஆச்சர்யம் என்றால் மழை மேகங்கள் விரைவிலேயே கலைந்து விட்டன   நிம்மதிப் பெருமூச்சு விட்டார்

இரண்டு நாட்கள் கழித்து மழை அடித்துக்கொட்டி மேலும் நன்மையை செய்தது

அவர் தன் நன்றிக்கடனை செலுத்தியது புளியால் பெரியநாயகி  தேவாலயத்தில்.

அந்த ஊர் மாதாவின் பெயர்தான் பெரியநாயகி..

புளியால்  என்ற ஊர் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது

அந்த சம்பவத்துக்குப்பிறகு நானும் சிலமுறைகள் சென்றுள்ளேன்

அவரவர் இறையவர் குறைவிலர்


Thursday, May 6, 2021

கொரோனா தினங்கள்

 நமக்கெல்லாம் கொரோனா வராது என்ற நம்பிக்கை இனியும் யாருக்கும் வேண்டாம்.    யாரும் தப்பிக்க வாய்ப்பில்லை. 


கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வந்தேன்.   ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல்


அதில் கொரோனா தொற்றி விட்டது


உண்மையில் ஆரம்பத்தில் தெரியவில்லை.   நாள் முழுக்க தூக்கம் ,  தலைவலி  இருமல் என படுத்தி எடுத்து விட்டது


நான் வழக்கமாகவே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்பவன்  தற்போது கூடுதலாக தனிமைப்படுத்திக் கொண்டேன்


ஓரளவு குணமானதும் டெஸ்ட் செய்து பாரத்த்போது கொரோனா வந்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது


கஷாயங்கள் ,   மாத்திரைகள் ,  சக மனிதர்கள் அன்புக்கு  நன்றி


என் உறவினர் ஒருவர் இப்படி பாதிக்கப்பட்டு  மூன்று லட்சம் செலவானது


சிலருக்கு செலவு செய்தும் பயனற்ற சூழலும் உண்டு


சிலர்  வெகு எளிதாக இதைக் கடந்து விடுகிறார்கள்


எனவே  இதை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.   ஜாக்கிரதையாக இருங்கள்    தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்   தடுப்பூசி போடுங்கள்      உரிய  சோதனைகளை செய்து கொள்ளுங்கள்

Monday, February 15, 2021

தினமணியை அசிங்கப்படுத்திய அபிலாஷ்



 மதிப்புக்குரிய தினமணி ஆசிரியர் அவர்களுக்கு

தினமணிக்கு என பாரம்பரியம் உண்டு.  வலுவான ஆசிரியர் வரிசை உண்டு

தினமணியில் எழுதுவது என்பதை கௌரவமாக நினைப்போர்  உண்டு.  தினமணியில் எழுதப்படுபவை சிரத்தையுடன் வாசகர்மீதான மரியாதையுடன் எழுதப்படுகின்றன என்ற எண்ணம் வாசகர்களுக்கு உண்டு

ஆனால் தினமணியின் விழுமியஙககள் மீதோ அதன் வாசகர்கள் மீதோ எள்ளளவும் மரியாதை இல்லாத தனது மரியாதை இன்மையை வெளிப்படையாகவும் கூறவும் செய்கிற அபிலாஷ் சந்திரன் என்பவருக்கு தொடர்ந்து ஏழு
ஆண்டுகள் வாய்ப்பளிப்பது விந்தையாக இருக்கிறது

வாங்க இங்க்லீஷ் பேசலாம் தொடரை வேண்டா வெறுப்பாக எழுதுகிறேன் , அதில் தான்  புகுத்தும் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த தகவல்கள் ஆசிரியர் குழுவினருக்குப்புரியவில்லை , கட்சி இதழ்களாக இருந்திருந்தால் புரிந்திருக்கும் , வெகுஜன இதழ் என்பதால் புரியவில்லை , நான் எழுதியதில்லையே கொஞ்சமும் பிடிக்காமல் எழுதுவது இதைத்தான் ,  ஆங்கிலம் என்பது சாதாரண மொழி என நினைப்பதால்  ஆங்கில அறிவு படைத்த நாய் பாத்திரத்தை உருவாக்கி எழுதுகிறேன் அதுவும்
ஆசிரியர் குழுவுக்குப் புரியவில்லை


என்றெல்லாம் தினமணி ஆசிரியர் குழுவை , ஆங்கில ஆர்வம் கொண்டு அந்த தொடரை படிக்கும் வாசகர்களை இழிவு படுத்துகிறார்


அந்த தொடர் எவ்விதத்திலும் தரமானதோ தினமணிக்கு புகழ் சேர்ப்பதோ அல்ல

ஆயினும் இவ்வளவு இழிவுகளைத் தாங்கிக்கொண்டு அவருக்கு வாய்ப்பளிப்பது விந்தையிலும் விந்தை

எத்தனையோ திறமைசாலிகள் , ஆங்கில மொழி மீதும் மொழியியல் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் , வாசகர்களை மதிப்பவர்கள் நம்மிடம் உண்டு. 
ஆனாலும் ஒருவருக்கு விருப்பமில்லாத துறை ஒன்று குறித்து எழுத வைத்து தரமற்ற படைப்பை வழங்குவது இதழியல் தர்மமா என வாசகர்கள் குழம்புகிறார்கள்


அன்புடன்

ஒரு தினமணி வாசகன்

Wednesday, January 13, 2021

பணம் தரும் மந்திரம்

 தொழில் நுட்பம் வளர வளர , நன்மையும் தீமையும் பரவும் வேகம் பன்மடங்கு அதிகரிக்கிறது.


அரசியல் , பாலியல் அரட்டைகள் என நேரத்தை வீணடிக்கலாம்  அல்லது நன்மையையும் நாடலாம். இதெல்லாம் அவரவர் விருப்பம்


இணையத்தில் நல்ல விஷயங்கள் கொ ட்டிக்கின்றன.  அறிவியல்  ஆன்மிகம் இலக்கியம் தொழில் நுட்பம் என ஏராளமாய்க்கற்கலாம்

  ஒரு நூலில் செல்வ வள மந்திரம் என ஒரு பதிகத்தை ஒருவர் பரிந்துரைத்து இருந்தார்

இப்படி யாரேனும் சொன்னால் நான் அதை ஏற்பதுமில்லை.  புறம் தள்ளுவதுமில்லை


ஆராய்ச்சி நோக்கில் முயன்று பார்ப்பேன். விளைவுகளை விருப்பு  வெறுப்பின்றி எழுதி வைத்து விடுவேன்


அந்தவகையில் அந்த பதிகத்தை தினமும் சொல்லி வரலானேன்.  

ஓரளவு நல் விளைவுகள் தெரியலாகின


இந்த நிலையில் ஒரு டிராமடிக்கான நிகழ்வு


ஒரு நாள் போஸ்ட் மேன் 

கதவைத்தட்டினார்.  நமக்கு யார் லெட்டர் போடப்போகிறார் என அசட்டையுடன் கதவைத்திறந்தேன்.


சார் உங்களுக்கு மணிஆர்டர் என சொல்லி காசு கொடுத்தார்


ஒரு பத்திரிக்கையில் இருந்து காசு..  நான்என்ன எழுதினேன்  எப்போது எழுதினேன் என்று சுத்தமாக நினைவில்லை

இது குருட்டு அதிர்ஷ்டமா , தற்செயலா , மந்திரத்தின் விளைவா என்றெல்லாம் தெரியவில்லை

சரி  .  பதிவு செய்து வைப்போம் என இங்கு பதிந்து விட்டேன்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா