Friday, June 18, 2021

சிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை

 விருப்பு வெறுப்பின்றி அனைத்து மத அனைத்து வகை ஆன்மிக அமைப்புகளுக்கு செல்பவன் என்ற முறையில் சிவசங்கர் பாபா குறித்து உங்கள் அனுபவம் என்ன என கேட்பவர்களுக்காக இந்த பதிவு

சில மாணவிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு சரி அல்லது தவறு என சிபிசிஐடி விசாரணைதான் ஒரு தெளிவைத்தரும்.  அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை


இருபது ஆண்டுகள் செயல்படும் பள்ளியில் திடீரென ஏன் இப்போது ஏன் குற்றச்சாட்டு என்பது தெரியவில்லை.  ஆனாலும் உண்மை எப்போது வெளிவந்தாலும் நல்லதுதான்


சுஜாதா இந்தப்பள்ளிக்கு சென்று , விகடனில் உயர்வாக எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்

வலம்புரிஜான் , மாலன் , சுதாங்கன் என பலரும் உயர்வாகவே தமது  பதிவு செய்துள்ளனர்.

அப்படி ஒரு கருத்துதான் எனக்கும்.  நானும் அந்த ஆஸ்ரமத்தை சென்று பார்த்துள்ளேன்.  


ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்க்கூடும். அதை என் போன்ற வழிப்போக்கர்கள் ஊர்ஜிதப்படுத்தவோ மறுக்கவோ முடியாது;

     சிவசங்கர் பாபா தப்பி ஓட முயற்சிக்கவில்லை.   இதய நோயாளியான அவரால் தப்பி ஓடி ஒளிய முடியாது.  விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

விசாரணையில் உண்மை வெளி வரும்வரை காத்திருப்போம்

யார் வேண்டுமானாலும் எப்போதும் செல்லலாம் ,  காணிக்கைகள் இல்லை , அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் என பிரகாசித்த சம்ரட்சணா அமைப்பும் சுஷில் ஹரி பள்ளியும் வீழுமா அல்லது இந்த திடீர் வெளிச்சத்தால் மேலும் புகழடையுமா என்பதெல்லாம் விசாரணை முடிவில்தான் தெரியும். 

உண்மை வெல்லட்டும்


இதில் ஒரு சுவாரஸ்யம்

மஞ்சள் பத்திரிக்கைகளும் , இணைய ஊடகங்களும் அவர் மீது எந்த ஆதாரமும் இன்றி சேற்றை வாரி இறைத்தன

சன் டிவி விவாதத்தில் யாகவா முனிவர் , சிவசங்கர் பாபாவை செருப்பால் அடித்தார் என்றெல்லாம் அடித்து விட்டனர்

சம்ரட்சணா மீது எதிர்கருத்து கொண்டிருக்கும் சன் டிவி , அந்த விவாதத்தை தன் கரூவூலத்தில் இருந்து ஒளி பரப்பியது.

சன் டிவி நினைத்திருந்தால் ,  பாபா பேச்சை எடிட் செய்து விட்டு , யாகவா முனிவர் பேச்சைமட்டும் வெளியிட்டு ,  சிவசங்கர் பாபா இமேஜை காலி செய்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் நடுநிலையாக விவாதத்தை முழுமையாக − சிவசங்கர் பாபாவின் பண்பான விளக்கம் உட்பட − ஒளிபரப்பினர்

அந்த கால,கட்டத்திலக , யாகவா vs சிவசஙகர்  பாபா.  வென்றவர்,யார் என்ற கேள்விக்கு ,  தனது பண்பால் வென்றவர் பாபா என பதிலளித்து இருந்தார் லேனா தமிழ்வாணன் ( கல்கண்டு )

எந்த பொறுப்பும் ஏற்காமல் வெறும் ஹிட்ஸ்களுக்கான பொய்களைப்பரப்பும் இணைய ஊடகங்களை நம்பி அச்சு இதழ்களையும் ,  தொலைக்காட்சி சானல்களையும் அழிய விட்டுவிடக்கூடாது



Wednesday, June 16, 2021

எழுத்தாளனைத் தாண்டுதல்

 சாருவின் எழுத்தை ஏன் இன்னும் யாரும் தாண்டிச் செல்லவில்லை என்றொரு விவாதம் சாருவுடனான உரையாடலில் எழுந்தது

சமீபத்தில் ஜெயமோகன் வாசகர்களால் நடத்தப்பட்ட ஒரு சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் அனைத்தும் ஜெயமோகன் எழுத்தை போலி செய்ய முயல்பவை என்ற விமர்சனம் எழுந்தது

    ஜெயமோகனைத் தாண்ட வேண்டும் என்ற சிலரது விழைவு இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தியுள்ளது

   ஆனால் சாரு இந்த போக்கை ஊக்குவிப்பதில்லை

சமீபத்தில் சாருவின் நல்லதொரு வாசகரான காயத்ரி எழுதிய கதை ஒன்றை சாரு பகிர்ந்திருந்தார்.

பெரிதும் வரவேற்பைப் பெற்ற அந்த கதை , வித்தியாசமான கதைக்களம் கொண்டது.   வாழ்க்கை பற்றிய கேள்விகள் , மரணம் குறித்த பார்வை என ஆழமான கதை .  வித்தியாசமான சடங்குகள் ,  கலைச்சொற்கள் என புதிய அனுபவம் தந்த கதை.

சாருவைத் தாண்ட வேண்டும் , அவரை போலி செய்ய வேண்டும் என்ற எத்தனம் சிறிதும் இல்லாததால் வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது

அதேபோல ராம்ஜி நரசிம்மனின் சிறுகதை .  கதையின் கடைசி வரியில் நிகழும் திறப்பு என்ற சிறுகதையின் செவ்வியல் வடிவத்தில் கச்சிதமாக பொருந்தும் கதை.  

இதுவுமே சாரு பாணியில் இருந்து மாறுபட்ட கதை


அராத்து எழுதுவதில் சமகால பார்வை , சமகால உறவுச்சிக்கல்கள் என இருக்கும்,கதை சொல்லாடலில் சாருவுக்கே பிடிக்காத அளவுக்கு ஆங்கில கலப்பு இருக்கும் . அந்த பிழைகள் (?!) கதைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுப்பது வேறு விஷயம்.

இவருமே சாருவை போலி செய்ய முயல்வதில்லை

நிர்மலின் அறிவுப்பூர்வமான தர்க்கவியலான எழுத்து வேறுவிதம்

செல்வகுமார் கணேசன் , கருந்தேள் ராஜேஷ் ,  யாரையோ குளிர்விக்க சாருவிடம் கோபித்துக்கொண்டு பிரிந்து சென்ற சில எழுத்தாளர்கள் என யாருமே சாருவை தாண்டவோ அவரை நகல் செய்யவோ முயல்வதில்லை

திருக்குறளை தாண்ட முயலாமல் , தமிழுக்கு தத்தமது பாணியில் வளம் சேர்த்த புலவர்கள் போல ஜீரோ டிகிரியை , ராசலீலாவை , எக்சைல் நாவலை படித்து ஒரு உத்வேகம் பெற்று தமது பாணியில் எழுதுவதே நல்லது.   ஜீரோ டிகிரியை தாண்ட வேண்டும் என்பது வேண்டாம் என இவர்கள் நினைக்கிறார்கள்

அதற்காக எல்லோருமே இப்படி இருக்க வேண்டும் என்பதில்லை

சிலர் பாலகுமாரனை மாதிரி , சுஜாதா மாதிரி எழுதி பிரபலமாக இருக்கிறார்கள். ஜெயமோகனைத் தாண்ட விரும்புவோரும் உள்ளனர்


இரண்டு சிந்தனைகளுமே இருகககட்டுமே ? நல்லதுதானே




   



Saturday, June 12, 2021

நித்யானந்தா அளித்த வைரம்

 நித்யானந்தா ஒரு காலத்தில் மீடியாவின் டார்லிங் ஆக இருந்தார்.  அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கட்டுரைகள் அல்லது செய்திகள் வரும்.   

விஜய் டிவியில் காலை எட்டுமணிக்கு அவரது சொற்பொழிவு ஒளிபரப்பாகும்.   அலுவலகத்துக்கு லேட்டாய்ப் போய்த் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என அந்த சொற்பொழிவை கேட்டு விட்டுதான் கிளம்புவேன்

பிறகு சர்ச்சை கிளம்பியதும் ஊடகங்கள் அவரை கைவிட்டன.  நாம் பாரக்கப்போவது இதுவல்ல.


மீடியாவில் அவர் பரபரப்பாக இருந்தபோது அவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன்.;

அது எனக்கு மிகவும் உதவியது

ஒருவன் கடற்கரையில் அமர்ந்தபடி  பொழுதுபோக்கிக் கொண்டு இருந்தான். விளையாட்டாக , பக்கத்தில் இருந்த கூழாங்கற்களை கடலில் வீசியபடி இருந்தான்.

அரைமணி நேரம் ஆனது.  பக்கத்தில் இருந்த கூழாங்கற்கள் காலியாகும்  நிலையில் கடைசி கற்களை கவனித்து அதிர்ச்சி அடைந்தான்.  காரணம் , அவை சாதாரண கற்கள் அல்ல  .   விலை உயர்ந்த வைரக்கற்கள்.  அதை அவன் மூளை உணர்ந்தாலும் , அரைமணி நேர பழக்கம் காரணமாக கை அனிச்சையாக மேலும் இரண்டை கடலுக்குள் எறிந்தது.

 எஞ்சி இருந்த கடைசிக்கல்லை விரக்தியாகப் பார்த்தான்.  பெரிய பொக்கிஷத்தையே அல்லவா தொலைத்து விட்டோம் என நினைத்தபடி அதையும் கடலுக்குள் எறிந்து விட்டு கிளம்பினான்.


இதுதான் நித்யானந்தர் சொன்ன கதை

இதன்பிறகு அவர் சொல்லும் விளக்கம் சுவாரஸ்யம்


விழிப்புணர்வு இல்லாமையால் அவன் வைரங்களை வீசினான்.  ஆனால் விழிப்புணர்வு வந்தபிறகாவது நிதானித்து இருந்தால் கடைசி ஒரு கல் அவனுக்கு கிடைத்திருக்கும்.   அந்த ஒரு கல் அவன் வாழ்க்கைக்கு போதுமானது.

போனதைப்பற்றி கவலைப்படாமல் ,  கடைசியாக கிடைத்த ஒரு கல்லை வைத்து அவன் ராஜாவாக வாழ்ந்திருக்க முடியும் என்பது அவரது விளக்கம்;

     காலம் கடந்து விட்டது என்ற எண்ணமே பல பொக்கிஷங்களை நம்மிடம் இருந்து பறித்து விடுகிறது

      நடைப்பயிற்சி நல்லதுதான் சார் , இதெல்லாம் சின்ன வயசுலயே தெரிஞ்சு இருந்தா நல்லா இருந்திருக்கும் ,  பள்ளிப்பருவத்திலேயே பேச்சுக்கலை ஆர்வம் வந்து இருந்தா கலக்கி இருக்கலாம் , நாலு கழுத வயசாய்ருச்சு இப்ப ஆர்வம் வந்து என்ன பண்றது என நினைத்து பல நல்லவற்றை நாம் பின்பற்றுவதே இல்லை


நல்லவற்றை தொடங்க இப்படி நினைக்க வேண்டியதே இல்லை.    தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் தனது வயதான காலத்திலும் புதிய மொழிகளை கற்றுக்கொள்ள முயன்றார்.  இதெல்லாம் சின்ன,வயசில் செஞ்சிருக்க வேண்டியதுஎன நினைக்கவில்லை


கல்லூரி முதலாண்டு படிக்கும்போது ,  கை எழுத்துப் பயிற்சி செய்து எழுத்தை அழகாக்க சோம்பலாக இருக்கும். இதெல்லாம் ஸ்கூல் டேய்ஸ்ல செஞ்சிருக்க வேண்டியது என நினைப்போம்


அந்த நினைப்பு கூடாது.   எப்போதும் எதையும் கற்கலாம். புதிதாக ஆரம்பிக்கலாம்

ஒரே மாதிரி வாழாமல் புதிதுபுதிதாக கற்பது வாழ்க்கையை உற்சாகமாக ஆக்கும்


எப்போது கேட்டாலும் ஏதாவது ஒன்றை ஆரம்பித்து சில நாட்கள் ஆகி இருப்பது நல்லது












Tuesday, June 8, 2021

அன்றாட வாழ்வின் அழகியல் − கவிதை நூல் பார்வை

 

   உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது  எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி  அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும் சில நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அப்படி நம்பிக்கையூட்டும் கவிஞர்களில் ஒருவர்தான்  " மதார் "

இவரது வெயில் பறந்தது கவிதை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற நூலாகும்.


போலித்தனமற்ற  சிடுக்குகளற்ற இயல்பான குரலில் இக்கவிதைகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

  விழிப்புணர்வுடன் இருந்தால்  காற்றில் பறக்கும் சிறு இலை கூட அரிய மெய்ஞான தரிசனம் அளித்து விடும் என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.


ஒரு கவிஞன் அன்றாட சம்பவங்களில்கூட இந்த அரிய கணத்தை கண்டு கொள்கிறான


பலூன்  இளைக்கும்போது கேட்கிறது 

அகக்காற்றை அழைத்துப் போகும் 

புறக்காற்றின் அவசரம்

என்று ஒரு கவிதை.


ஒரு கணத்தை ஒரு தருணத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.  இது நம்மை எடுத்துச் செல்லும் உயரங்கள் அதிகம்.

   நதி கடலில் சங்கமிக்கச் செல்லும்போது கடல் சில அடிகள் முன்,நகரந்து நதியை தன்னுள் இழுத்துக் கொள்ளும் . காதல் காமம்  ஆன்மிகம் என  அனைத்துக்கும் பொதுவான  சங்கமம் ,  அழிவின்மை , சாஸ்வதத்தன்மை என பலவற்றை இந்த சில வரிகள் நினைவு படுத்துகின்றன

 


எங்கிருந்தோ 

ஒரு பந்து வந்து 

கைகளில் விழுந்தது  


தான் இன்னாருக்குச் சொந்தம் 

என்று அறிவித்துக்கொள்ளாத 

பந்து 

பூமியைப் போலவே இருந்தது 


உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

 ஒருமுறை 

ஒரேயொரு முறை 

சிரித்தது


எங்கிருந்தோ வந்து விழும் பந்து வழியாக கவிஞன் காணும் தரிசனமும் அதை அந்த பந்தும் அக்னாலட்ஜ்  செய்வதும் கவிதையும் யதார்த்தமும் படைப்பாற்றலும் கைகுலுக்கும் அழகான இடம்



அமைதியான ஒரு அறை 

சுற்றி இருட்டு 

ஒரு மெழுகுவர்த்தி தரும்

 நம்பிக்கையில் 

அமர்ந்திருக்கும் பெண்

 திரியில் விளக்காடுவதை 

அவள் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருப்பாள்

 ‘ஒரு பனிக்காலத்து மாலை 

தரையில் கண்டெடுத்த 

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதின் அவசியம் இப்போது புரிகிறது’ 

என அவள் தனது டைரியில் எழுதுகிறாள் எழுதி முடித்ததும் 

அறைச்சுவர் நான்கும் 

அவளை நெருங்கி வந்து அமர்கின்றன


இந்தக்கவிதையில் வரும் பெண்ணும் , பனிக்கால"மாலையும் , இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் அழகான காட்சிப்படிமங்களாக மனதில் தைத்துவிடுகின்றன

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதன் அவசியம் என்பது சுவாரஸ்யமான வரிகள்.

நல்லவேளை ,  தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிடாமல் பத்திரப்படுத்தினோமே என ஆறுதல் பெருமூச்சு விடுகிறாள்.  பத்திரப்படுத்தாமல் போனோமே என வருந்துகிறாள் என்ற இரு சாத்தியங்களுமே கவிதைக்குள் உள்ளன.  உண்மை என்ன என்பது ஒருபோதும் வெளிவரமுடியாத,ரகசியம் என்பதை கடைசி வரிகள் சொல்கின்றன.


இது பூடகமான கவிதை என்றால் அடுத்து சற்று வெளிப்படையான கவிதை 



நதிக்கு ஓடும் பைத்தியத்தை 

சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான் 

பைத்தியம் தெளிபவனின்

 மண்டையில் நிகழும் 

மாற்றங்களுக்கு 

ஒப்பானது அது

இந்த அனுபவம்,பலருக்கும் கிடைத்திருக்கும்..


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது 

தனது ஒற்றைப் பார்வை 

வாயிலாகவே

 மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது 

நான் வெறுமனே

 காகத்தின் கண்களை 

கூர்மையாகப் பார்க்கிறேன்

உலகை அளக்கும் காக்கையின் கண்கள் வழியே உலகைக்காணல் என்பது அழகான பார்வை..   


முகத்திற்குத் 

தண்ணீர் ஊற்றினேன்

 வெயில் கழுவினேன் 

மீண்டும் ஊற்றினேன் 

வெயில் கழுவினேன்

வெயில் என்ற அருவம், உருவமாக மாறும் தருணம்

கதவும் நானும் 

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் 

ஞாபகப்படுத்திச் சொன்னேன் ‘மரம்தானே நீங்க’ 

கதவு சொன்னது

ஏ! குட்டிப் பயலே’

கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைப்பார்த்தால் கல் தெரியாது


நாற்காலி ,  கதவு என பார்ப்பவர்களுக்கு அவை வெறும் ஜடப்பொருட்கள்தான்.   அவை எல்லாம் மரங்கள் என அடையாளம் கண்டு கொள்ளவும் சிலர் உண்டு என்பதைவிட  அப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கு எப்படிப்பட்ட  மனம் தேவை என்பதுதான் கவிதை..   இயற்கையை நாம் அறியும்போது இயற்கையும் நம்மை அறிகிறது என்ற ஜென் கணம் கடைசிவரியில் சரேல் என நிகழ்கிறது

நமத்துப் போன தீக்குச்சி 

ஒன்றுக்கும் உதவாது 

எனச் சபித்து எறிகிறாய்

 அது அமைதியாக விழுகிறது

 எரியாத காட்டின் 

பறவைக்கூட்டிற்குக் கீழ்

    மிகப்பெரிய சாத்தியக்கூறு ஒன்று நிகழாமல் போவதன் காட்சி வெளிப்பாடு


சரியான  கண்கள் பார்வை இருந்தால் அன்றாட கணங்களும் அற்புதம்தான் ,  வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான் என்ற இக்விதை தொகுப்பின் சாரத்தை இக்கவிதை சுட்டுகிறது


சன்னலைத் திறந்ததும்

 ஒரு பெரும் ஆச்சர்யம் -  

ஆகாசத்தின் கதவா

 என் எளிய சன்னல்

மதார் அவர்களுக்கு வாழ்த்துகள்


வெயில் பறந்தது கவிதை நூல்   தவறவிடக்கூடாத ஒன்று












Saturday, June 5, 2021

கவர்ச்சி வில்லன்




 

அ  இ அ தி முவின் நட்சத்திர பேச்சாளராகவும் ,  எம ஜி ஆரின் நம்பிக்கைக்கு உரிய நண்பராகவும் திகழ்ந்தவர்  கவர்ச்சி வில்லன் என அழைக்கப்பட்ட கண்ணன்.

மதுரை வீரனில் ஆரம்பித்து எம்ஜிஆரின் கடைசிப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல எம்ஜிஆர் படங்களில்  நடித்துள்ளார்.

எண்பதுகளிலும் ரஜினி , விஜயகாந்த் , சத்யராஜ் என பலரது படங்களில் நடித்துள்ளார்


என்ன கொடுமை என்றால் ,  டிவிக்களில் இவர் நடித்த படங்களைப்பற்றி அறிவிக்கையில் இவர் பெயரைச் சொல்வதில்லை.   மற்றும் பலர் என்பதில் இவரை அடக்கி விடுகிறார்கள்


மதுரை வீரன் படப்பிடிப்பின்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவரின் கம்பீரமான  தோற்றத்தைப்பார்த்து எம் ஜி ஆர் அழைத்து நடிப்பு சான்ஸ் அளித்தார்.  கண்ணன் என பெயரும் சூட்டினார்.

அவரது கம்பீரமான தோற்றத்தால் கவர்ச்சி வில்லன் என அழைக்கப்படலானார்;

சின்ன வயதிலேயே எம்ஜிஆர் ரசிகரான இவர்  அரசியலிலும் எம்ஜிஆர்கூடவே இருந்தார்.   ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தார்

அஇஅதிமுக பேச்சாளராக இருந்த இவர் அதிமுக மேடையிலேயே உயிரை இழந்தது குறிப்பிடத்தக்கது


மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்.  பிறகு சிகிச்சை பலனின்றி காலமானார்

      இவரை அதிமுக  பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

   வரலாற்று ஆவணமாக திகழத்தக்க இவரது அரிய புகைப்படங்கள்  (  எம்ஜிஆர் கலைஞர் அண்ணா போன்ற தலைவர்களுடன் எடுத்தவை )    ஷீல்டுகள் போன்றவற்றை இவரது குடும்பத்தினர்  எடைக்குப் போட்டுவிட்டனர்

           இவரது மகனான மகேஸ்வரனும் திரைத்துறையில் மோதிப்பார்த்தவர்தான்.  இவருக்கு வெற்றி வசப்படவில்லை

    இது போன்ற கசப்பான அனுபவங்களால் புடம்போடப்பட்டவராக  கண்ணனின் பேரன்  பாலாஜி மகேஸ்வர் திகழ்கிறார்.

   இவர் சிறந்த போட்டோகிராபர்.    குறிப்பாக  அழிந்து,வரும் அல்லது அழிந்த திரையரங்குகளின் அரிய  புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார்


அந்த புகைப்படக்கண்காட்சியை சில ஆண்டுகள் முன் சென்னையில் பார்வையிட்டேன்


தாத்தா ,  மகன் ,  பேரன்  என மூன்று தலைமுறைகளாக சினிமா மீதான இந்த passion  வியக்கத்தக்க ஒன்று


    


Thursday, June 3, 2021

பிசாசு −2 மிஷ்கின் அப்டேட்

 பிசாசு படம் அனைவருக்கும் பிடித்த படம்.

இயல்பான நகைச்சுவை ,  மனித நேயம் , உறவுகள் , அற்புதமான காதல் , ராதாரவியின் அழகான நடிப்பு போன்றவற்றை ஒரு பேய்ப் படத்தில் பார்ப்போம் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதில் வரும் ஆட்டோ டிரைவரை யாரும் மறக்க முடியாது


ஆனால் பிசாசு −2 படம் ,  பிசாசு முதல் பாகத்தின் நீட்சி அன்று என மிஷ்கின் கூறியுள்ளார்


கண்ணியமான காதல் , தாய்ப்பாசம் , மனிதநேயம் என கதாநாயன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நச் என சொன்னது முதல் பாகம்.   இரண்டாம் பாகம்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம்.  இதற்காக ஆண்ட்ரியா  கடுமை உழைத்துள்ளார். அவருக்கு நல்ல,பெயர் கிடைக்கும்.   அவரது திரை வாழ்வின் முக்கியமான படமாக இருக்கும்  விஜய் சேதுபதி கேரக்டர் ஆச்சர்யப்பட வைக்கும்


முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா வருகிறார்.   சந்தோஷ் பிரதாப்பும் உண்டு


இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்


Wednesday, June 2, 2021

ஓர் ஆவி ஆராய்ச்சி :)

 அறிவியலின் சுவாரஸ்யம் என்னவென்றால் சில அடிப்படையான விஷயங்கள்கூட நமக்குத் தெரியாது.  அது தெரியாது என்பதே எப்போதாவதுதான் தெரியும்

உதாரணமாக தண்ணீர் எந்த வெப்பநிலையில் ஆவியாகும் ?

  பலர் 100 டிகிரி செல்சியஸ் என்பர்.  

கொதிநிலை என்பது வேறு ,  ஆவியாதல் என்பது வேறு 

தண்ணீர் 100 டிகிரியில் கொதிக்க  ஆரம்பிக்கும்,,கொதித்து ஆவியாகும் அதற்குமேல்  என்னதான் சூடாக்கினாலும் வெப்பநிலை உயராது.    ( மலைகளில் இதை விட குறைந்த வெப்பநிலையில் கொதிக்க ஆரம்பிக்கும்.  சாதாரண வளி மண்டல அழுத்தத்தைவிட அதிக அழுத்தம் இருந்தால்   100 டிகிரியைவிட அதிக வெப்பநிலையில் கொதிக்கும்  − உதாரணம், , பிரஷர் குக்கர்  120 டிகிரி வரை தண்ணீர் தாக்குப்பிடிக்கும்)

ஆனால் ஆவியாதலுக்கு  அவ்வளவு வெப்பம் தேவையில்லை..   கொதிக்காமலேயேகூட  தண்ணீர் ஆவியாகலாம்்

கீழே சிந்திக்கிடக்கும் தண்ணீர் , தரை வெப்பத்தை பயன்படுத்தியேகூட ஆவியாகும்.  நமது உடல் வெப்பத்தை பயன்படுத்தியேகூட வியர்வை ஆவியாகிவிடும்

காற்றோட்டம் ,  தண்ணீரின் பரப்பளவு ,காற்றின்  ஈரப்பதம் , வெப்பம் ஆகியவை ஆவியாதலை தீர்மானிக்கினறன

மின்விசிறி சுழன்றால் துணி எளிதில் உலர்கிறது.  காரணம் காற்றோட்டம்

ஒரு குவளையில் இருக்கும் நீர் ஆவியாவதற்கு பல நாட்கள் ஆகும்.  அதே தரையில் கொட்டினால்  ( மண் தரை அல்ல ) உடனே உலரும்.   காரணம் பரப்பளவு


மழைக்காலங்களில் துணி உலர அதிக நேரம் ஆகிறது.  காரணம் காற்றின் ஈரப்பதம்

வெயிலில் உலர்த்தினால் அந்த வெப்பத்தில் விரைவாக உலர்கிறது


    கொதிநிலை ,  ஆவியாதலுக்கு இடையேயான வித்தியாசத்தை குழந்தைகளுடன் பேசுங்கள்;

     கொதிக்கும்போது ஆவியாகும்  ஆனால் அனைத்து ஆவியாதலுக்கும் கொதிப்பு தேவையில்லை






Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா