கலைமகள் மாத இதழும் ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழும் இணைந்து சிறுகதைப் பட்டறை எனும் பயிலரங்கை நடத்துகின்றன என்ற செய்தி எனக்கு சற்றே வியப்பளித்தது.
ஆன்மிகம் , ஞானத்தேடல் , சமூகத்தேடல் என பயணிக்கும் ராமகிருஷ்ண மடம் , இலக்கியத்தில் ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த ஆச்சர்யம் அளித்தது
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் வேறு எங்கோ போய்க்கொண்டிருப்பவர்கள் தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து அறிந்து , சரி போய்த்தான் பார்ப்போமே என கேஷுவலாக வர முடியாது.
ஒரு மாதம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிக்கான அழைப்பு அனுப்பப்படும்
ராமகிருஷ்ண மடத்தில் ஏசி ஹாலில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடந்தது
இனிமையான ஆன்மிக சூழலில் இலக்கிய நிகழ்வு . பெயரை பரிசோதித்தபின்னே அனுமதித்தனர் அழகான விவேகானந்தர் படம், அவரது நூல் , பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய பொதி அனைவர்க்கும் வழஙககப்பட்டது
ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி மந்திரங்கள் சொன்ன பிறகு நிகழ்ச்சி தொடங்கியது
எழுத்தாளர்கள் வித்யா சுப்ரமணியம் மாலன் , தேவிபாலா ஆகியோர் சிறுகதை எழுதும் நுட்பம் குறித்து வகுப்பெடுத்தனர்.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரமணியன் அவர்கள் பேசியதை தொகுத்துக்கூறி மனதில் பதிய வைத்தார்
ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தர் ஆகிய ஆன்மிகவாதி்களுடம்கூட சிறுகதைகள் குறித்து சில நிமிடங்கள் பேசியது சிறப்பாக இருந்தது
அனைத்துக்கும் சிகரமாக , உலகளாவிய ராமகிருஷ்ண மடங்களின் துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ் அவர்களும் அழகாக ஆனால் சுருக்கமாக சிறுகதை குறித்த தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்
தனது சிறுவயதில் சிறுகதைப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது சுவாரஸ்யம். ஒரு விஷயத்தை சிறுகதை போல சொல்லும் தன் பாணி பலரை ஈர்த்து வருகிறது எனக்குறிப்பிட்டார்.
பேச்சுவாக்கில் ஒரு சிறுவனுடனான ஒரு அனுபவத்தை ஆன்மிக கருத்தை வலியுறுத்துவதற்காக சொன்னார். அது பிறகு மாலன் தன் பேச்சில் குறிப்பிட்ட சிறுகதை பஞ்சாங்கத்துக்கு முற்றிலும் ஒத்துப் போனது..
வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர் ( ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் ) தமிழ்ச் சிறுகதை வரலாற்றை சுருக்கமாக பேசினார்
செய்திகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு இருந்த அன்றைய சூழலில் பாரதியார் தனது சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு இடமளித்து தமிழில் சிறுகதை கலையை ஆரம்பித்து வைத்ததை சொன்னார் மாதவையா வவேசு ஐயர் டிஎஸ் சொக்கலிங்கம் சிசுசெல்லப்பா ராமையா கநாசு மெளனி என சிறுகதையை வளர்த்த முன்னோடிகளைப்பற்றியும் சுஜாதா சுரா போன்றோர் பார்வை மணிக்கொடி காலகட்டம் என விரிவாக பேசினார்;
சுருக்கம் , சுவை , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை தூண்டல் போன்ற சிறுகதைக்கு தேவையான அம்சங்கள் குறித்துப் பேசினார்.
சிறுகதை ஆசிரியனிடம் ஆரம்பிக்கும் சிந்தனை வாசகனிடம் தொடரும்படி எழுதப்படுவதே நல்ல சிறுகதை என்றார்
அதன்பிறகு பேசிய கீழாம்பூர் சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின் தேவை குறித்தும் அதை கலைமகள் தொடர்ந்து நடத்த நினைத்திருப்பதையும் சொன்னார். தரமணியல் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.
உவேசா , கிவாஜ ஆகியோர் வழியில் கலைமகள் இதழ் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றும் என்றார்
பிறகு பேச வந்தவர் எழுத்தாளர் பாரதி சந்துரு
சிறுகதைகளின் அவசியம் குறித்துப்பேசினார்.. சிறுகதை சமகாலப்பிரச்சளைப் பேசுகிறது அதிலிருந்து ,மீளும் ஊன்று கோலாகவும் சிறுகதைகள் உள்ளன என்றார்;
உதாரணமாக சூடாமணி எழுதிய அக்கா என்ற சிறுகதை.
அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்
தனக்கு குழந்தை இல்லாத சோகத்தை காட்டிக் கொள்ளாமல் தங்கையின் குழந்தையை அன்பாக கவனித்துக்கொள்கிறாள். அந்தக்குழந்தையும் பெரியம்மா மீது பாசமாக இருக்கிறது ,தங்கையும் அன்பானவள்தான்
ஒரு நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.
அக்கா மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்
பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘
“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.
ஒரு வார்த்தை உலகத்தையே நரகமென எண்ணவைக்கிறது இன்னொரு வார்த்தை வாழ்வை சொர்க்கமெனக் காட்டுகிறது சூழல்கள் மனிதர்கள் என அனைத்தும் கணம்தோறும் மாறும் மாயத்தைச் சொல்கிறது கதை
சீசர் என்ற ஜெயகாந்தனின் கதையை அடுத்தபடியாக பேசினார்
ஜெயகாந்தனுக்கே உரிய டிராமாட்டிக் உச்சம் கொண்ட கதை இது
வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த ஒரு குடியிருப்பு ஹவுஸ் ஓனர் மகனின் பார்வையில் நகரும் கதை
ஏன் ஹவுஸ் ஓனர் பையனின் பார்வை என்றால் அதுதான் கதையை இன்னும் நெருக்கமாக்குகிறது. பெரிய அளவு தீமையோ பெரியஹீரோயிசமோ செய்ய முடியாத ஒரு சாட்சி மட்டும்தான் அவன்
தமது வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது அபாண்டமாக பழி சுமத்தி , அவளது கணவனை அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள் எல்லாம் சுவையான மெகாசீரியலை ரசிப்பது போல அந்தப்பெண்ணின் கதறலை ரசித்தபடி கள்ள மெளனம் சாதிக்கின்றர்.
மகன் ஓடிப்போய் கணவனை அழைத்து வருகிறான். கணவர் அமைதியாக வந்து என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். என் மனைவி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணையை நம்புங்கள். பிறர் வாழ்வை எட்டிப்பார்க்காதீர்கள் என கம்பீரமாக கூறுகிறார்.
வேறு வீட்டுக்குப்போய்விடலாம் இது மோசமான மனிதர்கள் வாழும் இடம் என்கிறாள் மனைவி
உலகம் இப்படித்தான் இருக்கும் பயந்தால் வாழ முடியாது என ஆதரவாகப்பேசுகிறார் கணவர்;
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வாழ வேண்டும் என பெண்களுக்கு அட்வைஸ் சொல்லாமல் ஒரு, மன்னனுக்கு உரிய வீரம் அமைதி கண்ணியத்துடன் பிரச்சனையை சந்தித்த அக்கணவன் அந்த இளைஞன் பார்வையில் பேரரசர் சீசராக தோன்றுவதாக கதை முடிகிறது
வாழ்க்கை குறித்து இப்படி மேன்மையான பார்வைகள் உருவாக சிறுகதைகள் அவசியம் என்று பேசினார் பாரதி சந்துரு
சிறுகதைகளை எப்படி வடிவமைப்பது
சிறுகதைகளின் வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம் பேசினார்
ராமகிருஷ்ண மட நுாலகம்தான் தன்னை நல்ல தொரு வாசகியாக்கியது நல்ல வாசகன்தான் நல்ல எழுத்தாளன் ஆக முடியும் என பேச்சை ஆரம்பித்தார்
திஜா எழுதிய அம்மா வந்தாள் நாவல்தான் எழுதத்துாண்டும் உத்வேகம் அளித்தது என்றார்
தானே சொல்வது போல எழுதுதல் , பல்வேறு கதாபாத்திரங்கள் சொல்வது போல எழுதுதல் , குளம் மரம் ஆகியவை சொல்வதுபோல எழுதுதல் என எப்படியும் எழுதலாம்
உருவகக்கதைகளும் எழுதலாம்
ஆற்றங்கரை பிள்ளையாரை பாரததேசமாக உருவகித்து புதுமைப்பித்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார் அந்த பாதிப்பில் நான் எழுதிய கதைதான் "என்று தணியும்" என்ற கதை
எளிய விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம் ஒரு சிறுவன் ரிக்ஷா என்பதை மழலை மொழியில் ரிஸ்கா என்பதை சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார் அசோகமித்திரன்
அதேபோல மிகப்பெரிய துயரங்களை இழப்புகளை கதையாக்கலாம் நான் அப்படி எழுதிய கதை ஒன்று மிகப்பெரிய புகழை எனக்கு ஈட்டித்தந்தது
சிறுகதை அதன் முதல் வரிக்கு முன்பே ஆரம்பித்து விட வேண்டும் கடைசி வரிக்கு பின்பும் தொடர வேண்டும் என்றார்
அந்தக்கதைக்கு அடிப்படையாக அமைந்த தனது சோகத்தை அவர் சொன்னபோது பலர் கண்கள் கலங்கின அவர் அதை சொன்ன விதமும் ஒரு சிறுகதை போல இருந்தது
சிறுகதை எழுதும்போது கவனிக்க வேண்டியவை குறித்து தேவிபாலா பேசினார்
தலைப்பிலேயே பதில் இருக்கிறது. சிறுகதை எழுதவேண்டுமானால் கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை , சம்பவங்களை கவனியுங்கள. சும்மா பார்ப்பது அல்ல கூர்மையான கவனிப்பு தேவை
எனது முதல் சிறுகதை கலைமகள் இதழில் வெளியானது அந்தவகையில் கலைமகள்தான் என் தாய்வீடு
சுமங்கலி பிரார்த்தனை என்பது அக்கதையின் பெயர்.
விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அடிக்கடி சொல்வார் கண்ணையும் காதையும் திறந்து வைத்தால் ஆயிரம் கதைகள் கிடைக்கும்;
பேருந்துப்பயணத்தின் போது ஜன்னல் வழியே நான் கண்ட ஒரு காட்சி − மடிசார் அணிந்து ஒரு, பெண் அதிவேகமாக ஸ்கூட்டரில் பறந்த ஒரு காட்சி − என் மனதில் விதையாக விழுந்து மடிசார் மாமி என்ற புகழ்பெற்ற நாவல் ஆனது
எனவேதான் வாகன வசதிகள் வந்துவிட்ட பின்பும்கூட பேருந்துகளில் பயணிக்கிறேன்
ஜவுளிக்கடை உணவகங்கள் என எங்கும் கதைகள் கிடைக்கும்
சின்னச்சின்ன உணர்வுகளை சின்னசின்ன வாக்கியங்களில் எழுதிப்பழகுங்கள்
ஒரு இளம்பெண் நடந்து கொண்டு இருந்தாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. நனைந்துவிடாமல் குடைபிடித்தபடி போய்க்கொண்டிருந்தாள்
இப்படி எழுதாதீர்கள்
குடைபிடித்தபடி சென்று கொண்டிருந்த அவளுக்கு... என ஆரம்பித்து அடுத்தடுத்து செல்லுங்கள்
குடை அவள் ஆகிய இரு சொற்கள்மூலம் மழையையும் ஒரு பெண் என்பதையும் உணர்த்திவிட முடியும்
ஊசி போல நறுக் என மனதில் பதிய வேண்டும்
ஆரம்பம் முக்கியம்
கோலம் போட வாசலுக்கு வந்தபோது , படமெடுத்து ஆ டிக்கொண்டு இருந்தது பாம்பு என அதிரடியாய் ஆரம்பியுங்கள்
அதேமாதிரி முடிவிலும் ஒரு பஞ்ச் தேவை
வட்டார பாஷை வேண்டாம் பொதுவான தமிழில் எழுதுங்கள்
வட்டார பாஷை தேவைதான் ஆனால் ஆரம்பகட்டத்தில் வேண்டாம்
தற்போது பெண்கள்தான் அதிகம்,,வாசிக்கின்றனர் எனவே அவர்கள் பிரச்சனைகளை எழுதுங்கள்
பெண்களால் ஆனதுதான் குடும்பம் குடும்பங்கள் சேர்ந்து வீதி வீதிகள் சேர்ந்தது ஊர் ஊர்கள் சேர்ந்ததுதான் தேசம் மற்றும் உலகம்
என்னைப்பொருத்தவரை திருவள்ளுவரை மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பேன். எத்தனை எத்தனை கருத்துகள் உவமைகள்
அவசரமாக கதை வேண்டும் என பத்திரிக்கைகள் கேட்டால் உடனே திருக்குறளைப் புரட்டுவேன்
எந்தக்குறள் கண்களில் படுகிறதோ அதை வைத்து கதை எழுதிவிடுவேன்
கனவுகளை குறித்து வைப்பது நல்லது சில கனவுகள் மறந்ததுபோல இருக்கும். யோசித்தால் நினைவுக்கு வந்து விடும். குறித்து வைத்தால் கதை எழுத வித்தியாசமான கருக்கள் கிடைக்கும்
சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான பொறிகளாக அமையலாம்
ஒரு வீட்டின் முன் ஒரு, ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.
அவ்வளவுதான் பத்திரிக்கையுலக பிதாமகன் சாவி அவர்கள் பாராட்டி தலைப்பிட்டு ( தலைப்பு வாசலில் செருப்புகள்) பிரசுரிக்கத்தக்க ஒரு கதை தயாராகி விட்டது
அந்த கதை இதுதான்
ஒரு கணவன் மனைவி.. கணவன் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்ட மனைவி.
ஒரு நாள் கணவன் அலுவலகம் சென்ற பிறகு இவள் ஒரு வேலையாக வெளியே செல்கிறாள். அங்கே ஒரு பாலியல் தொழில் நடக்கும் வீட்டைக்கடக்கும்போது செம அதிர்ச்சி
கணவனின் செருப்புகள் அவ்வீட்டு வாசலில் கிடக்கின்றன
அவன் மீதான நம்பிக்கை சுக்குநூறாக சிதறுகிறது கண்ணீருடன் வீடு திரும்புகிறாள்
இது எதுவும் அறியாத கணவன் வழக்கம்போல மாலையில் வீட்டுக்கு வருகிறான். வந்தவன் அதிர்ச்சியில் உறைகிறான்
தாழிடப்பட்ட அவன்வீட்டு வாசலில் யாரோ ஒரு ஆடவனின் ஒரு ஜோடி செருப்புகள்
இந்தக்கதை நல்ல வரவேற்பைப்பெற்றது
என்ன ட்விஸ்ட் என்றால் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவத்தை கதையாக எழுதிவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வந்து விட்டார்கள் ( அரங்கில் பலத்த சிரிப்பு ) கற்பனைக்கதை என சொன்னாலும் நீண்ட நாட்கள் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள்
வர்ணனைகள் அதிகம் வேண்டாம். போதனைகளும் வேண்டாம்
ஒரு பாத்திரத்தின் குணாதிசயங்களை தெளிவுற வரையறுத்து விட்டால் , பல்வேறு குணாதிசங்கள் கொண்ட பாத்திரங்களே கதையை எழுதி விடும்
நறுக் என சுருக்கமாக சொல்லும்கலை முக்கியம் . ஏழே வரிகளில் ராமாயணம் , மகாபாரதத்தை சொல்லி வியப்பிவ் ஆழ்த்தியவர் கண்ணதாசன்
வரவு எட்டணா , செலவு பத்தணா , அதிகம் ரெண்டணா கடைசியில் துண்டனா என ,படத்தின் கதையை பாடலின் சில வரிகளில் சொன்னதுபோல கதையின் முதல் வாக்கியத்திலேயே கதையை சொல்லலாம்
ஒரு முறை ஒரே வார்த்தையில் "கதை எழுதச்சொன்னார்கள்
எழுதினேன்
கதை : ஐயோ
அவ்வளவுதான் கதை.. பிறகு விளக்கினேன்
( அவரது விளக்கம் , கதை எழுத தேவையான பஞ்சாங்கம் குறித்து மாலன் பேச்சு , கல்கி குறித்த சுவாரஸ்யம் , கெளதமானந்தர் சொன்ன கதை , வித்யா சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது கணவரின் மறைவுச் செய்தி அடுத்த பதிவில்)
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]