அதன் பிறகு மாலன் அதிரடியாகத் தன் பேச்சை ஆரம்பித்தார்
பாரதியார் போன்ற ஆளுமைகளால் வளர்ந்த சிறுகதை இலக்கியம் இன்று மிகவும் அவசியமான ஒன்றாக உருவாகியுள்ளது.
எனவே இந்த சிறுகதைப்பட்டறை வரவேற்புக்குரியது. ஆனால் பட்டறை என்ற சொல் சரியாகத் தோன்றவில்லை சிறுகதைப் பயிலரங்கு என்பது சரியாக இருக்கும்
ஒருமுறை கதை என்றால் என்ன என்பதற்கு எழுத்தாளர் கல்கி நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொன்னார்
ஒருவன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டானாம் கொட்டப்பாக்கு காசுக்கு எட்டு என்றானாம் பதில் சொன்னவன்
இது சிறுகதையா?
பஞ்சாங்கம் இல்லாமல் சிறுகதை எழுதமுடியாது
எனன பஞ்சாங்கம்
ஐந்து அம்சங்கள்;
1 முதன்மைப் பாத்திரம். ( நல்லவன் என்பது இல்லை)
2 எதிர் பாத்திரம் ( கெட்டவனாக இருக்க வேண்டியதில்லை)
3 கதை நிகழும் களம் . சூழல்;
4 மையப்புள்ளி plot
5 ஒரு திருப்பம்
கல்கி சொன்ன உதாரணத்தில் இவை இருப்பதை கவனியுங்கள்
ஊருக்கு செல்ல விரும்பும் முதன்மை பாத்திரம். சம்பவம் நிகழும் களம் , ஒரு நகைச்சுவையான திருப்பம் என வந்து விட்டது அல்லவா
ஹிப்பி ஒருவன் ஒற்றைச்செருப்பு அணிந்து நடந்து கொண்டிருந்தான்
என்னாச்சுப்பா ? இன்னொரு செருப்பு தொலைஞ்சுருச்சா என கேட்டார் வழிப்போக்கர்
ஒண்ணுதாங்க கிடைச்சது என்றான் அவன்
இந்த எதிர்பாராத பதில் , முதன்மை பாத்திரமான ஹிப்பி குறித்த பார்வை , களம் , மையப்புள்ளி என அனைத்தும் இதை ஒரு கதை ஆக்குகிறது
கதைக்கு ஆரம்பம் வெகு முக்கியம்;
உதாரணமாக எம் எஸ் கல்யாணசுந்தரம் எழுதிய தபால்கார அப்துல்காதர் சிறுகதையின் ஆரம்ப வரிகளைக் கவனியுங்கள்
சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ‘ என்று விசாரித்தார்.
‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் ‘ என்றேன்.
தபால்கார அப்துல் காதர் என்ற கேரக்டர் மீது எப்படி ஆர்வத்தை ஏற்படுத்தி மேற்கொண்டு படிக்க வைக்கிறார் என்பது கவனிக்க வேண்டியது
தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் முத்திரை பதித்த இன்னொரு அற்புதமான ஆரம்பம்
அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க..( காஞ்சனை − புதுமைப் பித்தன்)
( பிச்சையின் பின்குறிப்பு. இந்த ஆரம்ப வரி்களுக்கு ஏற்ப சிறுகதை ஒன்றை எழுதச்செய்து , சுஜாதா ராஜேஷ்குமார் போன்ற பிரபலங்களிடம் கதை எழுதி வாங்கி பிரசுரித்தது அன்றைய குமுதம் வார இதழ்)
மறக்க முடியாத இன்னொரு துவக்கம்
அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்
இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.
”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான்.
( காலமும் ஐந்து குழந்தைகளும் அசோகமித்திரன் )
அதேமாதிரி முடிவும் பளீர் என இருக்க வேண்டும்
உதாரணம் பாருங்கள் மறக்கவே முடியாத இறுதி வரிகள்
என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்! ( புதுமைப்பித்தன்)
இப்படி ஆரம்பமும் முடிவும் அமைந்துவிட்டால் கதைக்கான,,நடை அதுவாகவே இயல்பாக அமைந்து விடும்;
எழுதுபவன் வாசகனுடன் நேரடியாகப் பேசுவது கவிதை
எழுதுபவன் தனது பாத்திரங்களுடன் உரையாடுவது சிறுகதை
பாத்திரங்கள் பார்வையாளனுடன் பேசுவது நாடகம்
இந்தத் தெளிவு முக்கியம்;
கதையை சொல்லாதீர்கள் கதையை வாசகன் முன் நிகழ்த்திக்காட்டுங்கள்
ஏன் என கேட்டன மரபான கதைகள்
(ஏன் இத்தனை துயர்கள் என்பது போன்ற ஒரு விக்டிம் கோணத்தில்)
ஏன் கூடாது என திமிறுகின்றன நவீன கதைகள் ( இந்த விதிகயை மரபுகளை ஏன் உடைக்க்ககூடாது என்பது போல)
இந்தப்போக்குகளை உள்வாங்க வேண்டும்
ஒரு உண்மை சம்பவம் கூறி முடிக்கிறேன் இதை யாரேனும் சிறுகதை ஆக்குங்கள் ( பிச்சையின் பிகு . நான் எழுத நினைத்தேன் சூழல் அனுமதிக்கவில்லை)
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் என் சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தேன். ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது
பதட்டமாக இருந்த அம்மாவிடம் விசாரித்தேன்
நம்ம ஊருல வெள்ளம் வந்துருச்சுப்பா பக்கத்து ஊருல பாதிப்பு அதுதான் ஹெல்ப் பண்ண போறோம் என்றார்
வறட்சிக்குப் புகழ் பெற்ற நம்ம ஊர்ல வெள்ளமா என நம்ப முடியாமல் கேட்டேன்
மழை வெள்ளமல்ல அணையில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் என்றார்
சம்பவ இடத்துக்கு விரைந்தோம்
அந்த கிராமம் வெள்ளத்தால் முழுமையாக துண்டிக்கப்பட்டு தீவு போல இருந்தது . உதவிப்பொருட்கள் அவர்களை அடைய வழியே இல்லை
அப்போது ராமகிருஷ்ண மடத்தின் இரு துறவிகள் துணிச்சலாக ஒரு முடிவுக்கு வந்தனர் மரத்தில் ஒரு கயிறைக்கட்டிவிட்டு எதிர் கரைக்கு நீச்சலடித்து சென்று அங்கே எதிர்முனையைக்கட்டினர் அந்த கயிற்றின் வழியாக இருவரும் மாறி மாறி பயணித்து உதவிப் பொருட்களை கொண்டுபோய் சேர்த்தனர்
சற்றும் ஓய்வற்ற பணி இதைக்கண்டு பிறரும் தைரியம் பெற்று உதவிக்கு வந்தனர்
மாலை வரை பணி நடந்தது. நீங்கள் இல்லாவிட்டால் நாங்களும் குழந்தைகளும் பசியால் துவண்டிருப்போம் என துறவிகள் கையைப்பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள் கிராமத்தினர்
வெள்ளம் வடிந்து விட்டது இனி பயமில்லை என புன்னகையுடன் ஆறுதலாக சொல்லிவிட்டுக் கிளம்பினர் துறவியர்
சற்று தொலைவு சென்றதும் ஒரு துறவி மற்றவரிடம் பலவீனமாக சொல்வது எனக்கு மட்டும் கேட்டது
" ஒரே பசி மயக்கம். போயி , கொஞ்சமாவது சாப்பிடணும்"
ஓர் ஊரின் பசியையே ஆற்றிய இருவரும் அதுவரை ஒரு, வாய் உணவுகூட எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை உறைத்து , அதிர்ந்து போய் நின்றேன்
−−−
அதன்பின் கேள்விகளுக்கு எழுத்தாளர்கள் பதிலளித்தனர். உணவு வழங்கலுடன் நிகழ்வு நிறைவுற்றது. பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது
............
வித்யா சுப்ரமணியம் குறிப்பிட்ட உணர்வுப்பூர்வ நிகழ்வு
என் சிறுகதை ஒன்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றது அது கற்பனைக்கதை அல்ல உண்மை நிகழ்வு
என் கணவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதை தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து என்ற மருத்துவர் எச்சரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை
ஒரு நாள் என் வீட்டிலிருந்து போன் வந்தது , என் கணவர் இறந்து விட்டதாக . இல்லத்திலேயே மரணமாம்
இதைக்கேட்டு கலங்கிப்போய் இருக்க வேண்டிய நான் ஒரு, வகை மகிழ்ச்சி அடைந்தேன்
அவர் மரணம் எதிர்பார்த்த ஒன்று சாலையிலோ பொது இடங்களிலோ அது நடந்து விடுமோ என்பதுதான் என் பயமாக இருந்தது. இல்லத்திலேயே இறப்பு என்பது நல்லதுதான் என தோன்றியது இந்த உணர்வை இதில் இருக்கும் அவலத்தை கதை ஆக்கினேன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]