Pages

Sunday, June 30, 2024

திருவண்ணாமலையில் ஞான தீபம் − சாரு நிவேதிதா


 


பீச் என்ற சிறுகதை குறித்து சாரு அவ்வப்போது பேசுவார்.  உண்மையில் அதைவிட கவித்துவமான ஒரு பகுதி எக்சைல் நாவலில் வரும். மரங்களைப் பற்றி மட்டுமே ஓர் அத்தியாயம். அழகான விஷுவல் ட்ரீட் அது.


சாருவின் இசை ரசனையின் ஸ்தூல வடிவம் சீரோ டிகிரி என்றால் அவரது சினிமா ரசனையின் ஸ்தூல வடிவம் எக்சைல் எனலாம். 


தான் கற்றதையும் பெற்றதையும் அவ்வப்போது மேடைப் பேச்சுகள், பயிலரங்குகள் சூம் சொற்பொழிவு என பல தளங்களில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பெரிய ரசிகர் படையே உண்டு,


இந்தப்பின்னணியில் திருவண்ணாமலையில் திரைக்கலை பயிலரங்கம் நடத்துகிறார் என்பது பரவலாக ஆர்வத்தை ஏற்படுத்தியது,


சென்னையில் நடத்தாமல் திருவண்ணாமலையில் நடத்துவது சரியா என்றொரு குழப்பம் எனக்கு இருந்தது.


ஆனால் அரங்கம் நிரம்பும் அளவுக்கு பயிலரங்கம் நடந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  இப்படி ஒரு கட்டணப் பயிலரங்கம் இலக்கிய உலகில் இதுவே முதல் முறை. 


பலர் முதல் நாள் இரவே திருவண்ணாமலை வந்து விட்டனர். எனக்கு சில பணிகள் இருந்ததால், இரவு 12 மணிக்குதான் சென்னை விட்டு கிளம்பினேன். நான்கு மணியளவில் திருவண்ணாமலை அடைந்து ஒரு ரூம் புக் செய்து  சுடச்சுட நாளிதழ்க்கள் படித்து விட்டு, தூங்கி எழுந்து ஃபிரெஷாக கிளம்பினேன். 


நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் சாரு அன்றைய இரவு மட்டுமல்ல.. பல இரவுகள் தூங்கவில்லை. இதற்கான பணிகளில் ஓர் அணியே இரவு பகலாக வேலை செய்தது.


வெகு துல்லியமாக 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது


இப்பயிலரங்கி நோக்கம், இது குறித்து தான் சாருவிடம் சொன்னது என்ன என்பது போன்ற சுவையான தகவல்களை அராத்து பகிர்ந்து கொண்டார்


அதன்பின் பேசிய இயக்குநர் ராஜ் குமார் திரைப்படக்கலையில் சாருவின் பார்வை எந்த அளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும்  சாருவால் தான் உருவானது எப்படி என்பது குறித்தும் இயக்குநர் வெற்றிமாறனுடனான தனது பயணத்தையும் பேசினார்.


அதன் பின் வகுப்பை ஆரம்பித்த சாரு மாலை ஆறு மணி வரை தனி நபராக சரளமாக தங்கு தடையின்றி இடைவிடாத ஞான மழை பொழிந்தார்.


அவரது இசை ரசனை இந்திய தத்துவ மரபின் மீதான பார்வை  இலக்கிய ஞானம் போன்றவை திரைப்படக் கலை வகுப்புக்கு வேறொரு புதிய பரிமாணத்தை அளித்தது.


பொருத்தமான சினிமா காட்சிகள், இசைத் துணுக்குகளை பொருத்தமான நேரங்களில் திரையில் ஒளிபரப்பியது அழகாக இருந்தது இதன் முழு அனுபவம் நேரில்தான் முழுமையாக கிடைக்கும். 



அவர் சொல்லும் வெளி நாட்டுப்பெயர்கள் உச்சரிப்பை குறித்துக் கொள்வது பார்வையாளர்களுக்கு சிரமம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதற்கொரு ஏற்பாட்டைச் செய்வதற்காக நண்பர் ஸ்ரீராமை முன்வரிசையில் அமர வைத்த திட்டமிடல் வியக்க வைத்தது.


பீச் சிறுகதை கபிலர் ஆதி சங்கரர் நீட்சே மற்றும் உலகத் திரைப்படம் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றன என அவர் விளக்கியது ஒரு வாவ் கணம்



       நிம் விளையாட்டு,  ட்ரூத் வெர்சஸ் ரியாலிட்டி, புத்தர், நிலவின் பிரதிபலிப்பு என ஒவ்வொரு கணமும் கவிப்பூர்வமான  நகர்ந்தன. சில கதாபாத்திர வரிகளைச் சொல்லும்போது சாருவே அந்தப் பாத்திரமாக மாறும் ரசவாதமும் நடந்தது.



இயற்கை சூழலில் அமைந்த நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த ஆடிட்டோரியம் தரமான மதிய உணவு என உலகியல் விஷ்யங்களும் வெகு சிறப்பு


இதைத் தவிர தனிப்பட்ட முறையில் ஒரு காமெடியான  அனுபவம். நிகழ்ச்சிக்கான கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் இப்போது செலுத்தலாம் என அறிவித்தவுடன் சாரு வாசக வட்ட அட்மினை அணுகினேன்.


அதை குறிப்பேட்டில் குறித்துக்க்கொள்ளும் பொருட்டு உங்க பேரு , ஊரு சொல்லுங்க சார் என்றார் அவர்


நம்மை தெரியாத அளவுக்கு புதிது புதிதாக பலர் வந்துள்ளார்களே என்பது மகிழ்ச்சியாக இருந்தது


,மீண்டும் மீண்டும் ஒரே நபர்கள் என்பது தேங்கல் நிலை. நிகழ்ச்சியில் பழைய நபர்கள் வெகு குறைவு. பெங்களூரு ஹைதரபாத் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இருந்த புதிய நண்பர்களே மிக அதிகம்.


இதுதான் சாரு நிவேதிதாவின் வெற்றி 









No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]