அகிலனுடன் நான் - அமுதவன்
இ து எழுத்தாளர் அகிலன் அவர்களுக்கு நூற்றாண்டு
அகிலனுடைய மூத்த மகன் அகிலன் கண்ணன் எனக்கு நல்ல நண்பர். அகிலனுக்கு ஞானபீட விருது அறிவித்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது. "ஐயாவுக்கு (அவர்கள் வீட்டில் அப்பாவை ஐயா என்றுதான் அழைப்பார்கள்) ஞானபீடம் அறிவித்து இருக்கிறார்கள். டில்லிக்கு வருகிறீர்களா? போய் வருவோம்" என்றார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே “வருகிறேன்" என்றேன். அப்படித்தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
ஞானபீடம் என்பது ஒரு தனி அறக்கட்டளை, டெல்லியிலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறது. ஜெயின் வம்சத்தினர் இதன் சொந்தக்காரர்கள். வழக்கமாய் ஞானபீடம் பெறுபவர்களுக்கு ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் அறை போடுவார்கள். அங்கே தங்கவைத்து அழைத்துச் சென்று விருது வழங்குவார்கள். இதுதான் நடைமுறை.
அகிலனுக்கு மட்டும் விசேஷம்.
ஜெயின் அகிலனின் வாசகர் என்பதால் விஷயத்தை அகிலனிடம் சொல்லி "வீட்டிலேயே தங்குகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அகிலனும் ''சரி" என்று சொல்லிவிட்டதால் ஜெயின் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடானது.
ஜெயின் வீடு என்பது மிகப்பெரிய பங்களா. மாளிகை என்றும் சொல்லலாம். ஷெட் மட்டுமே ஒரு பத்து பதினைந்து இருக்கும். அத்தனையிலும் கார்கள்... சீருடை போட்ட டிரைவர்கள் தயாராக இருப்பார்கள். அகிலன்வருகிறார் என்பதற்காக அவருக்கு உணவு தயாரிக்க தஞ்சாவூரிலிருந்து ஒரு சமையற்காரர்... ஏ.சி.செய்யப்ட்ட தனி அறை,
- இத்தனை வசதிகளோடு இன்னொரு வசதியும் சேர்ந்து கொண்டது. காலையிலேயே ஒரு கட்டு கொடுத்து விடுவார்கள். மிகப்பெரிய பேப்பர் கட்டு. டைம்ஸ் ஆப் - இந்தியா என்னென்ன செய்தித் தாள்கள், மாதாந்திர, வார இதழ்கள் நடத்துகிறதோ, அவை அத்தனையும். ஒரு * கட்டாகக் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டு விடும்.
புது டில்லி என்பதால் நிறைய மத்திய அமைச்சர்களும், எம்.பிக்களும் அகிலனை மதிய விருந்துக்கும், இரவு விருந்துக்கும் அழைத்திருந்தார்கள். இவர்களிடம் விஷயத்தைச் சொல்லிக் கார் கேட்டபோது படு ஸ்ட்ரிக்டாகச் சொல்லி விட்டார்கள்.
“பிரதமர், ஜனாதிபதியைத் தவிர யார் வீட்டிற்கும் நீங்கள் போகக்கூடாது. நாட்டின் உயரிய விருதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதனால் அவர்கள்தான் உங்களைப் பார்த்துச் செல்ல இங்கே வரவேண்டும்."
அதன்படிதான் நடந்தது. ஓ.வி. அளகேசன் போன்றவர்களும்,
நிறைய எம்பிக்களும் அகிலனை ஜெயின் வீட்டிற்கு வந்துதான் பார்த்துப் போனார்கள். நிகழ்ச்சியைக் 'கவர்’ செய்ய ஆனந்த விகடன் சொல்லியிருந்ததால் நான் விகடனுக்கு ஏற்றாற்போல இரண்டு பக்கங்களுக்கு எழுதினேன். நிகழ்ச்சி விஞ்ஞான்பவனில் நடந்தது. அரசு நிகழ்வுகளெல்லாம் விஞ்ஞான்பவனில்தான் நடக்குமாம்.
விஞ்ஞான் பவன் ரொம்பவும் பெரியது. எதிரில் மிகப்பெரிய பால்கனி. அதில் ஏறினால் நடுவில் இருக்கும் செங்குத்தான சரிவில் இறங்கித்தான் ஹாலுக்கு வரவேண்டும். நாங்கள் மேடைக்குப் பக்கத்திலிருக்கும் அறைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டோம். பிரதமர் வந்ததும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு காப்பி, டீயெல்லாம் முடிந்தபிறகு மேடைக்குச் செல்லுவது என்பது ஏற்பாடு. (மொரார்ஜி காப்பி டீயெல்லாம் சாப்பிடமாட்டார்). பிரதமர் வருகைக்காக அந்த அறை ஜோடிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திடீரென்று ஒரு சின்ன சலனம் அங்கே தோன்றிற்று. நாங்கள் அங்கே காத்திருக்க... வந்த மொரார்ஜி என்ன செய்தாரென்றால் முகப்பிலேயே இறங்கிக் கொண்டு மொத்தப் படிகளிலும் ஏறி செங்குத்தான பாதையில் இறங்கி மேடைக்குப் பக்கத்திலிருக்கும் இன்னொரு அறைக்குச் சென்று அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். அப்போது மொரார்ஜிக்கு தொண்ணூற்றாரோ தொண்ணூற்றேழோ என்பதுதான். ற்கு வயது. விஷயமறிந்து நாங்கள் அடுத்த அறைக்கு ஓடினோம். மொரார்ஜியைச் சந்தித்தவுடன் அவரிடம் அகிலன் கேட்ட முதல் கேள்வி "எப்படி நீங்கள் உங்கள் உடலை மெயின்டெய்ன் பண்ணுகிறீர்கள்?' சிரித்துக்கொண்டே அவர் சொன்னபதில் “சின்ன வயதிலிருந்தே இயற்கையோடு வாழக் கற்றுக்கொண்டு விட்டேன்"
. பிறகு எங்கள் இருவரையும் பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அகிலன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த (நின்றபடியேதான்) பிறகு மேடைக்குச் சென்றார்கள். நானும் அகிலன் கண்ணனும் கீழே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டோம்.
விழா தொடங்கியது.
ஒரு பத்து நிமிடம்போல் ஆகியிருக்கும்...
கீழே பக்கவாட்டில் இருந்த கதவு திறக்கப்பட்டது. வேட்டி கட்டி முரட்டுக் கதர் போட்ட யாரோ ஒரு ஆசாமி உள்ளே நுழைந்தார். அவருடைய தோளில் ஒரு ஜோல்னாப் பை தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு யாரோ ஒரு வட இந்தியக் காட்டான்போல இருந்தார். நேரே வந்தவர் என்னுடைய பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என்னுடைய பக்கம் முகம் சாய்த்து என்னமோ என்னிடம் இந்தியில் கேட்டார். நான் “எனக்கு
இந்தி தெரியாது" என்றும் ஆங்கிலத்தில் கேட்குமாறும் சொன்னேன்.
"இல்லை. ஃபங்ஷன் துவங்கி நேரமாகிவிட்டதா? அகிலன் பேசிவிட்டாரா? என்று கேட்டேன்” என்றார் ஆங்கிலத்தில். "பங்ஷன் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் ஞானபீடம் வழங்கப்படவில்லை. பிரதமர் பேசின பிற்பாடுதான் அகிலன் பேசுவார் என்று நினைக்கிறேன்" என்றேன்.
இந்த நபர் வந்ததிலிருந்தே மொத்தக் கூட்டத்தில் ஒரு சலசலப்பும் குசுகுசு பேச்சுக்களும் இருந்ததைக் குறிப்பிடவே வேண்டும்...
இந்த சலசலப்பு மேடையிலும் தோன்றியது.
யாரோ மேடையிலிருந்து மேடைக்கு வா என்று அழைப்பதும், இவர் மேடைக்கு நான் வரவில்லை. இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று சைகை காட்டுவதும் நடந்தது.
பின்னர் மொரார்ஜியே இவரை மேடைக்கு வரும்படி அழைத்தார். பிரதமரின் சொல்லைத் தட்ட முடியாமல் இவரும் மேடைக்குச் சென்றார். பிறகுதான் தெரிந்தது, வந்தவர் கர்ப்பூரி தாக்கூர். அப்போதைய பீகார் மாநிலத்தின் முதல்வர். சின்ன வயதிலிருந்தே அகிலன்பால் ஈர்க்கப்பட்டதால் விமானம் பிடித்து அவசர அவசரமாக வந்தாராம். "நல்ல வேளை முக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே வந்துவிட்டேன்" என்று பேசினார்.
கர்ப்பூரி தாக்கூர், மொரார்ஜி இருவரும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமாகப் பேசினார்கள். அகிலன் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பேசினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே குடும்பத்தின் மூத்தவர் ஜெயின் இரண்டோ, மூன்று நாட்களோ பரோலில் வந்திருந்தார். எமர்ஜென்சி காலம் என்பதால் இந்திரா காந்தி அவரையும் பிடித்து ஜெயிலில் போட்டிருந்தார்.
அன்றைக்கு இரவு ஜெயினுடன்தான் இரவு உணவு நடைபெற்றது. அகிலன் சார்பாக ஞானபீட விருது கிடைத்த அன்று மாலை புதுடில்லியிலுள்ள விஐபிக்கள் எல்லாரையும் அழைத்து ஒரு தேநீர் விருந்து அளித்தனர் ஜெயின் குடும்பத்தினர். அந்த விழாவுக்கான அழைப்பிதழ், செலவுகள் அனைத்தையும் அவர்களே மேற்கொண்டனர். அந்தத் தேநீர் விருந்தில் ஆரம்பத்திலேயே ஒரு மேஜை நாற்காலிகள் போடப்பட்டது. அது ஜெயின் குடும்பத்தினருக்காக... அங்கே அமர்ந்து கொண்டவர்கள் வருகிற பெரிய மனிதர்களின் கால்களை எல்லாம் தொட்டுக் கும்பிட்டது வித்தியாசமாக இருந்தது.
இந்த விஷயத்தையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்... இந்தியாவில் அதுவரை ஞானபீடம் பெற்ற எல்லாரையும் அழைத்து ஒரு பாராட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் கன்னட சாஹித் பரிக்ஷத்தினர். இதற்காக செயின்ட் ஜோசப் கல்லூரி அருகிலுள்ள ஓட்டலை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தினர் அனைவருக்கும் அங்கு காலை டிபனை ஓட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக எல்லா எழுத்தாளர்களும் அங்கே குழுமியிருந்தனர் அகிலனும் அங்கே இருந்தார்.
- திடீரென்று "எந்தடா அகிலன் சௌக்கியமோ?" என்றுவாசலில் குரல் கேட்டது. . கர்ணகொடூரமான குரல்...
கையில் ஒரு சூட்கேஸையும் அக்குளில் ஒரு துணியையும் இடுக்கிக் கொண்டு அங்கே தகழி சிவசங்கரம் பிள்ளை நின்றிருந்தார்.
தகழியை அங்கே பார்த்ததும் அங்கே ஏற்பட்ட சலசலப்பைக் குறிப்பிட வேண்டும்...
தகழி நேராக அகிலனிடம் வந்தார். இருவரும் ஏற்கெனவே நல்ல நண்பர்கள் போலிருக்கிறது... இருவரும் கட்டி அணைத்துக்கொண்ட பாங்கில் அது தெரிந்தது. அப்படி அணைத்துக்கொண்ட படியே அவர்கள் நிற்க... தகழி அகிலனின் காதில் ஏதோ கூறினார். அவர் கூறியதைக் தொடர்ந்து அகிலனும் தகழியும் சிரித்த சிரிப்பு அந்த விருந்தினர் மண்டபத்தையே தூக்கிக்கொண்டு போவது போல் இருந்தது.
அப்படி என்ன சொல்லி விட்டார் தகழி?
அவர் சொன்னாராம்... “எனக்கு இன்னமும் ஞானபீடம் வழங்கப்படவில்லை.'
"தகழி என்றதும் எல்லாப் பரிசுகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எல்லாரும் நினைப்பதுபோலவே இவர்களும் நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதற்காகத்தான் வந்தேன். போய் ஒரு தமாஷ் பண்ணிவிட்டு வரலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் கிளம்பி வந்துட்டேன்" என்றிருக்கிறார், சிரிப்புக்குக் கேட்க வேண்டுமா?
(பிறகு தகழிக்கும் ஞானபீடம் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்)
......
ஞானபீடம் பெற்ற அகிலன் அரசாங்க அழைப்பின் பேரில் புதுடில்லியிலிருந்து ரஷ்யா சென்றார். அதற்காக அதிகாலையில் கிளம்பி அவரை விமான நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்ததும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
Very interesting write-up. It contains many unknown informations also.
ReplyDeleteநானும் மிகவும் ரசித்தேன். தங்கள் வாசிப்புக்கு நன்றி
Delete