Pages

Monday, December 23, 2024

வித்தியாசமான இயக்குனர் வித்தியாசமான காதல்

 படித்ததில் ரசித்தது 

.....


ரொம்ப வித்தியாசமான டைரக்டர் அவர். எப்போது நோக்கினாலும் அப்போதுதான் நாலு நாள் சேர்ந்தாற் போல உறங்கி விழித்தது மாதிரியிருப்பார். அந்தக் கண்களில் இனம் புரியாத சோகம் தாண்டவமாடும். கதை விவாதம் என்ற ஒன்று தினந்தோறும் நடக்கும் சில வாரங்களோ, பல மாதங்களோகூட அது நீளும். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சொல்கிற எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார். அப்புறமெதற்கு அவர்கள்? தான் சொல்வதைக் கேட்பதற்காகத்தான்.



அட அவராவது அதை கோர்வையாகச் சொல்வாரா என்றால், மண்ணாங்கட்டி அவர் பேசுவதை அவரே நவீன தொல்காப்பியர்களை வைத்து தமிழில் ரீமேக் செய்தால்தான் உண்டு.


அதுவே அவரிடம் இருக்கும் பெண் உதவி இயக்குனர்கள் என்றால், அவர்களுக்கு சீன் சொல்கிற சுதந்திரம் உண்டு. அதைப் பயன்படுத்துவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் படமாகி வருகிற வரைக்கும் புரிந்துகொள்ள முடியாத ரகசியம். தன்னுடன் மாய்ந்து மாய்ந்து கதை விவாதம் செய்யும் உதவி இயக்குனர்களுக்கும் உயிர் இருக்கும். பசி இருக்கும். பிள்ளைக்குட்டிகள் இருப்பார்கள். பஸ் இருக்கும். பஸ்சில் டிக்கெட் இருக்கும். என்பதெல்லாம் எதுவுமே தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத ஏகாந்தி அவர்.


இல்லையென்றால், மதியம் இரண்டு மணி வரை பேசிக் கொண்டேயிருக்கிற அவர், தனக்கு மட்டும் சிக்கன், மட்டன் ஐட்டங்களை வரவழைத்து வெட்டுவதையும் சரியாக இரண்டு பத்துக்கு வாட்சைப் பார்த்துவிட்டு, 'போய் சாப்ட்டுட்டு வந்திடுறீங்களா? என்று ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவதையும் எந்த மனிதாபிமானத்தில் சேர்ப்பது?


ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தன. அதெப்படி? அதுதான் அவரது தனிப்பட்ட திறமை. இளமை துள்ளுகிற வயசில் அண்ணன் தம்பிகளாகப் படமெடுக்க வந்தவர்கள் இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூத்திரமாகிவிட்டார்கள். இருந்தாலும் இந்த அண்ணன் மட்டும் பிச்சு பிச்சு போட்ட பிகாசோ ஓவியம் போல யாருக்கும் புரியாத படைப்பாளி.


இல்லையென்றால், இவர் இயக்கிய பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆன அந்த வருத்தப்படாத வாலிபர், 'ஆளை விடுங்கடா சாமீ என்று பாதியிலேயே ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து ஓடி வந்திருப்பாரா? இத்தனைக்கும் அது அவரே வளர்வதற்காக நாலு ஆபீஸ் கதவைத் தட்டி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த நேரம். அவருக்கே பொறுக்க முடியாத அவஸ்தை அது என்றால் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.


அட.. அது எப்ப? இரு வேறு உலகங்கள் பற்றிய கதை அது. சினிமாவில் நீண்ட கால தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால் இது நீண்ட காலத்திற்கும் முந்திய அந்தக் கால தயாரிப்போ என்று அஞ்சுகிற அளவுக்கு வருஷக்கணக்காக நீண்டது. அதில் ஹீரோவுடன் படம் முழுக்க

டிராவல் ஆகிற கேரக்டர் வருத்தப்படாத வாலிபருக்கு இருபத்தைந்து நாள் நடித்திருந்தார். ஒவ்வொரு நாளும் பிரசவ வார்டில் சேர்த்து பிள்ளையை கிழித்தெடுக்கிற மாதிரியே, எல்லாரிடமும் நடிப்பை வாங்கிக் கொண்டிருந்தார் டைரக்டர்.


'அந்தாளு என்ன நினைக்கிறாருன்னு நமக்கும் புரிய மாட்டேங்குது. நமக்கு புரியற மாதிரி சொல்லித் தொலையவும் மாட்டேங் குறாரு. அட.. நாம எந்த ஸ்பாட்ல நிக்குறோம்னு தெரிஞ்சா அதை வச்சாவது புரிஞ்சுக்கலாம்னா, சுத்தி பச்சை துணியை தொங்க விட்டுட்டு கிரீன்மேட் ஷாட்டுன்னு எடுத்துகிட்டு இருக்காரு. மண்டையிலயிருக்கிற பல்பை பீஸ் போக வைக்காம விட மாட்டாரு போலிருக்கே' என்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தவர்தான்.அதற்கப்புறம் அந்த திசைக்கே போகவில்லை அவர். நல்லவேளை... அங்கிருந்து ஓடி வந்தவருக்குதான் ஒன்பதாம் இடத்துல குரு. அதற்கப்புறம் அவர் செல்வாக்கு உயர்ந்து இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு டாப் ஹீரோவாகிவிட்டார்.


இவரென்ன ஆனார்? படம் வெளிவந்தது. அட்டர் பிளாப். கொல்லன் பட்டறையில கோடாலி செய்யுறவர்கூட, பிரிப்ரேஷன் இல்லாமல் போவதில்லை. கரி எவ்வளவு வேணும்? சம்மட்டி சைஸ் என்ன? அடிக்கிற ஆளுக்கு எனர்ஜி போதுமா? அல்லது பாதியிலேயே பல்ஸ் இறங்கிடுமா? என்றெல்லாம் பார்த்துப் பார்த்துதான் ஒரு கோடாலி செய்வார். இவர் அப்படியா? சுமார் பதினேழரை கோடி லாஸ், நஷ்டத்தை இவர் தலையில் கட்டிவிட்டது நிறுவனம்.


இவர் பண்ணிய ராவடியில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஓடிப்போன ஒளிப்பதிவாளர், தனக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல் ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அறையிலிருக்கும் லேன்ட் லைன் போனையும் துண்டித்துவிட்டு படுத்துவிட்டார். சுமார் ஒன்றரை நாள், யூனிட் முழுக்க, பிரேக் டவுன் ஆன அரசு பஸ்சை போல, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. அப்புறம் ஓட்டல் நிர்வாகத்திடம் கெஞ்சி வேறொரு சாவி போட்டு உள்ளே போய், ஆளை அமுக்கிக் கொண்டு வந்தார்கள்.


'அந்தாளு ஒழுங்கா வேலையைப் பார்க்கலேன்னா இப்படித்தான் என்றார் கேமராமேன். இவங்க ஈகோவுல நம்ம தலையை உருட்றானுங்களே...என்ற கடுப்பில்தான் நம்ம நேரம் வரட்டும் என்று காத்திருந்தது நிறுவனம். சரியாக கத்தி வைத்தார்கள். இன்னும் கடன் தீர்ந்தபாடில்லை.


சூடான இஸ்திரி பொட்டியில சுள்ளுன்னு தண்ணீர் துளியை வீசுன மாதிரிதான், அவ்வளவு மனக்குடைச்சலுக்கு நடுவிலும் காதல் வந்தது இவருக்கு. கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு ஆயிருச்சேன்னு ஒதுங்கிப் போற உலகமா இது? முதல் மனைவி விவாகரத்து பெறுவதற்குக் காரணமான அந்த நடிகை வெகு காலம் கழித்து மீண்டும் கிராஸ் ஆனார் இவர் வாழ்வில். ஏதோ ஒரு வார இதழின் வண்ணப்பக்கத்தில் அவர் புகைப்படம் வந்திருந்தது.


பக்கோடா போட்றவன் பார்சல் கட்ற பேப்பரையும் நினைச்சுகிட்டா மாவை எண்ணெய் சட்டியில போடுவான்? அப்படியொரு பக்கோடா பார்சலோ, அல்லது வரவழைத்த சஞ்சிகையோ? கரெக்டாக அந்த அட்டைப்படம் அவர் கண்ணில் பட்ட நேரம், ஆந்தையே ரெஸ்ட் எடுக்கப் போகலாமா என்று நினைக்கிற நடுராத்திரி இரண்டு மணி. காதலால் கசிந்துருகிய இருவருக்கும் திடீர் சண்டை வந்தது. ஏன்? எதற்கு? என்பதற்கெல்லாம் ஒரு காரணம் வேண்டுமா என்ன? வந்தது. அவ்வளவுதான். திடீரென தனது கதவோரம் நாலு தெருநாயைக் கட்டி வைத்து டைரக்டரு வரும்போதெல்லாம் காதே கிழிகிற அளவுக்கு குரைக்க விட்டார் நாயகி.



From.. கோடம்பாக்கம் செக்போஸ்ட் ஆர் எஸ் அந்தணன் 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]