ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கணத்தை மட்டும் சொல்கின்ற ஹாலிவுட் படங்கள் உண்டு. அதுபோல, புத்தகக் கண்காட்சி நடத்துதல் என்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு படைக்கப்பட்ட ஒரு நாவல்தான் அகிலன் கண்ணன் அவர்களின் வேர்பிடி மண் என்ற குறுநாவல்.
கணவன் மனைவி உறவு, நடுநிலைப்பார்வையில் ஒரு சிக்கலை அணுகல், நட்பு, அரசு இயந்திரம் செயல்படும் முறை, ஆங்காங்கு இருக்கும் நல்ல அதிகாரிகள் , ஏறிய ஏணியை எட்டி உதைத்தல் என பல விஷயங்கள் ஆங்காங்கு பாயசத்தில் கிடக்கும் முந்திரி போல சுவைக்கின்றன.
இரும்புச் சட்டக நிறுத்தம் ( ஸ்டாண்ட் ), நெறியாள்கை போன்ற அழகுத் தமிழ்ச் சொற்கள் மனதை அள்ளுகின்றன.. சொற்களை சிதைத்து விடக்கூடாது என்பதற்கு மு. வ ஒரு யுக்தியைக் கையாள்வார்... அதுபோன்ற ஒரு யுக்தியை அகிலன் கண்ணனும் பயன்படுத்தியுள்ளார்.
தில்லி புத்தகக் கண்காட்சியை விளக்கும்போது நாமே அங்கு நேரில் சென்ற உணர்வு உருவாகிறது.
கல்வி சார்ந்து வட இந்தியாவைத் தாழ்வாகவும் தென்னிந்தியாவை உயர்வாகவும் நினைத்துக் கொள்ளும் போக்கு நம்மிடையே உண்டு. ஆனால் ஆலயங்களை சிறப்பாகப் பராமரித்தல், ஐ ஏ எஸ் தேர்ச்சி, தொழில்துறை, இலக்கிய நிகழ்வுகள் என பலவற்றில் அவர்கள் நம்மைவிட சிறப்பாகவே உள்ளனர். ஒரு சில மாநிலங்களை வைத்து வட இந்தியாவையே தாழ்வாக நினைப்பது நமக்குத்தான் தீமை என்பதை இருவேறு புத்தக கண்காட்சிகள் மூலம் சுட்டிக்காட்டுகிறது நாவல்.
ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் ஒரு நாவலின் இலக்கிய மதிப்பை பாதிக்காது என்பது உண்மை.
ஆனால் இதை பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டு இன்று பல பதிப்பகங்கள் மெய்ப்புப் பார்த்தல் என்ற துறையே இல்லாமல் தப்பும் தவறுமாக நூல்களை வெளியிடுகின்றன.. சில்லறை சில்லரை, கருப்பு கறுப்பு போன்ற குழப்பங்கள் வந்தால் முன்பெல்லாம் அச்சு நூல்களில் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்வது வழக்கம்.
இந்த பிரஞ்ஞையுடன் தான் பாரம்பரிய பதிப்பகங்கள் செயல்பட்டன..கையில் காசு, வாயில் தோசை என்ற நோக்கில் செயல்படும் இன்று புற்றீசல்களாகக் கிளம்பியுள்ள பல பதிப்பகங்கள் இவற்றில் கிஞ்சித்தும் அக்கறை செலுத்துவதில்லை’
“ அச்சுப்பிரதியில் பிழையிருப்பின் அது நாம் உண்ணும் சோற்றில் கல் போலாகும் ; சில நேரம் பொருளே மாறுபட்டுவிடும் . அடுத்த தலைமுறைக்கு ஒருவேளை தவறான பதிவு சென்றுவிடக்கூடாதல்லவா ?
என்ற வரி வெகு நேரம் யோசிக்க வைத்தது..
இயல்பான நகைச்சுவையும் மொழி விளையாட்டும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன
உதாரணமாக புத்தகக் கண்காட்சியை துவக்கி வைக்க யாரும் முன்வராமல், அவர்களாகவே ஆரம்பித்தனர் என்பதை கேலியாகச் சொல்லும் வரிகள்
புத்தகக் காட்சி தானாகவே திறந்து கொண்டது . ஆம் , கலை நிகழ்ச்சி , ஊர்வலம் இவைகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன . அவை போல் அல்லாமல் புத்தகக் காட்சியை யாரும் திறந்து வைக்க வில்லை
பிடித்த வரிகள் சில:
உணர்வு வெளிப்பாட்டிலோ அவ்வறிவு , பாலில் தயிரெனப் பதுங்கிக் கொள்ளுகிறது .
சிறு நூல் ஆனால் நிறைவான நூல்
வேர்பிடி மண் ( நாவல் ) ஆசிரியர்: அகிலன் கண்ணன்
தமிழ்புத்தகாலயம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]